பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மருமகள் சவுமியா அன்புமணி: பாலியல் வன்கொடுமை யிலிருந்து குழந்தைகளைக் காக்க, சட்டம் மட்டுமே கருவி அல்ல; உண்மையான பாதுகாப்புக் கருவி தாய் தான்.ஒரு முறை நடக்கும் குற்றம், பலமுறை தொடர்ந்து நடத்தப்படுகிறது என்றால், அதற்கு முழு பொறுப்பை, தாய் தான் ஏற்க வேண்டும்.
உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக ஒரு குழந்தை பாதிக்கப்படும் வரை அலட்சியமாக இருக்கக் கூடாது. நமக்கு எத்தனையோ பிரச்னைகள் இருக்கலாம். பொருளாதார பிரச்னை, குடிகார கணவன் பிரச்னை, பணிச்சுமை என்று எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மகள்களை கண்காணியுங்கள்; அவர்களிடம் அக்கறை காட்டுங்கள்; முடிந்தவரை குற்றம் நடைபெறாமல் தடுத்து விடுங்கள்.பெண் குழந்தைகளை வளர்க்கும்போது பாலியல் தொந்தரவுகளைப் பற்றி சிறு வயதிலிருந்து சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். 'ஆபாசமாக யார் பேசினாலும் அது ஆசிரியராக இருந்தாலும் சரி, உறவினராக இருந்தாலும் சரி... கண்டிப்பாக தாயிடம் சொல்லி விட வேண்டும்' என்று திரும்பத் திரும்ப கற்றுக் கொடுங்கள்.
மொபைல் போன் வாங்கிக் கொடுங்கள்; அது சுயபாதுகாப்பு சாதனம் மட்டுமே. அதை முறையாகப் பயன்படுத்த பள்ளிக்கூடத்தில் பாடம் எடுக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் கணக்கு, அறிவியல் வகுப்புகளோடு, தற்காப்புக்கலை, மனவளக்கலை வகுப்புகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.ஒரு வீட்டில் களவு போகிறது என்றால், மறுநாள் காவல் நிலையத்தில் புகார் தந்து விட்டு, அடுத்த நாள் நம் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுவோம். பணம், நகை கொள்ளை அடிப்பது போன்ற அத்துமீறல் தான், பெண் குழந்தைகளின் உடலில் நடக்கிறது என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்; இதற்கு எந்த வகையிலும் அவர்கள் பொறுப்பு அல்ல. அந்த பிஞ்சுகள், சிறுமியர், மாணவியருக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டு விடாமல் அவர்கள் மனங்களை ஆறுதல்படுத்த வேண்டும்.
'பெரிய தவறு நடந்து விட்டது; வாழ்வே பறிபோய்விட்டது' என்று ஒரு நாளும் நினைக்க வைக்காதீர். தாய் அதை எளிதாகக் கடந்து விட்டால், நம் கைகளை பிடித்தபடியே, குழந்தைகளும் அதை எளிதாக கடந்து விடுவர். மனதளவில் அவளை தைரியப்படுத்துங்கள். மிக மிக தைரியமும், துணிச்சலும் வேண்டும் அம்மாவுக்கும், மகளுக்கும்! 'அம்மா' என்பது ஒரு சொல் மட்டும் அல்ல; போலியில்லாத வேலியே அது தான்!
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement