எண்ணுார் சாம்பல் கழிவு பாதிப்பு குறித்து மக்கள்... குமுறல்! பிரச்னையை பட்டியலிட்டு வல்லுனர்களிடம் வாதம்; எதிர்கால சந்ததியை வாழ விடுங்கள் என ஆவேசம்| Dinamalar

எண்ணுார் சாம்பல் கழிவு பாதிப்பு குறித்து மக்கள்... குமுறல்! பிரச்னையை பட்டியலிட்டு வல்லுனர்களிடம் வாதம்; 'எதிர்கால சந்ததியை வாழ விடுங்கள்' என ஆவேசம்

Added : டிச 31, 2021 | கருத்துகள் (2) | |
சென்னை-பகிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகளால், கடல் வளம் மற்றும் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, வல்லுனர் குழுவிடம் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.\ 'பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி, எதிர்கால சந்ததியினரை வாழ விடுங்கள்' என, மக்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பகிங்ஹாம்
எண்ணுார் சாம்பல் கழிவு பாதிப்பு குறித்து மக்கள்... குமுறல்! பிரச்னையை பட்டியலிட்டு வல்லுனர்களிடம் வாதம்; 'எதிர்கால சந்ததியை வாழ விடுங்கள்' என ஆவேசம்

சென்னை-பகிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகளால், கடல் வளம் மற்றும் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, வல்லுனர் குழுவிடம் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.\
'பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி, எதிர்கால சந்ததியினரை வாழ விடுங்கள்' என, மக்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பகிங்ஹாம் கால்வாயில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகள் குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், எண்ணுாரைச் சேர்ந்த ரவிமாறன், ரவீந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், 2016ல் வழக்கு தொடர்ந்தனர்.பின், இரு குழுக்கள் அமைக்கப்பட்டு, சாம்பல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்து கேட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்த ஷீலா நாயர் தலைமையில், பல்துறை வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.அக்குழு, சாம்பல் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்று காலை ஆய்வு செய்தனர்.பின், எண்ணுார், கத்திவாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.கூட்டத்தில், எண்ணுார், மீஞ்சூரைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.திரிசங்கு, தலைவர், காமராஜர் நகர், எண்ணுார்: சாம்பல் கழிவுகளால் மீன்களின் இனப்பெருக்கம் முற்றிலும் பாதிக்கிறது. மக்களின் வாழ்வாதாரம் அடியோடு ஸ்தம்பிக்கிறது.வெறுமனே கரையில் நின்று பார்ப்பதை காட்டிலும், படகில் சென்று பாருங்கள். அலையாத்தி காடுகளில் உள்ள செடிகளில், சாம்பல் மற்றும் ஆயில் கழிவுகள் படர்ந்து உள்ளது.தவிர, எண்ணுார் பவுண்டரியால் கருப்பு துகள்கள் வீடுதோறும் படிந்து நாசமாகியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.சேகர், முன்னாள் ஊர் நிர்வாகி, வ.உசி., நகர், எண்ணுார்: வடசென்னை அனல்மின் நிலைய சிமிலி, 100 மீட்டர் உயரம் மட்டுமே உள்ளது. கிழக்கில் காற்று வீசி, சாம்பல் கழிவால் எண்ணுார் பாதிப்பது தொடர்கதையாகி வருகிறது. சாம்பல் கழிவுகளால் ஆறு நாசம் அடைந்துள்ளது. பள்ளம் தோண்டி நேரடியாக சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றனர். தவிர, கை, கால்கள் மற்றும் பற்கள் பாதிப்பு என, பல்வேறு உடல் உபாதை பிரச்னைகள் உள்ளன. கோரமண்டல் நிறுவனத்தில், திறந்த வெளியில் சல்பர் கையாளப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.கருணாகரன், மீனவர், தாழங்குப்பம், எண்ணுார்: நாங்கள் 50 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். ஆற்றில், 3 -- 3.5 அடி உயரத்திற்கு சாம்பல் கழிவுகள் படர்ந்துள்ளன.சொறி, சிரங்கு, படை போன்ற பாதிப்புகளால் மக்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.சங்கர், தி.மு.க., - எம்.எல்.ஏ., திருவொற்றியூர்: சாம்பல் கழிவு பெரும் பிரச்னையாக உள்ளது. கடந்த 1994ல் துவங்கப்பட்ட வடசென்னை அனல்மின் நிலையத்தின் வயது முடிந்து விட்டது. திருவொற்றியூர், பொன்னேரி தொகுதிகளுக்கு தான் பாதிப்பு அதிகம். ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்னை, பற்கள் பாதிப்பு உள்ளது. வடசென்னை, மக்கள் வாழ தகுதியற்ற நிலமாக மாறி வருகிறது. சிமிலி உயரம் குறைவால் இப்பிரச்னை ஏற்படுகிறது. ஆட்சி மாறியும் அதிகாரிகளின் மனபோக்கு மாற வில்லை. சேதுராமன், காட்டுப்பள்ளி ஊராட்சி தலைவர்: வடசென்னை சாம்பல் கழிவால் பிரச்னை அதிகம் உள்ளது.2020ம் ஆண்டு குழாய் உடைந்து, சாம்பல் கழிவால் குடியிருப்புகளில் பிரச்னை என கூறினால், அதிகாரிகள் விநாயகர் சதுர்த்தி, சனிக்கிழமை விடுமுறை என காரணம் சொல்லி பணி செய்யவில்லை.ஆற்றின் வழியே மீன்பிடிக்க, எண்ணுாரில் இருந்து பழவேற்காடு வரை வந்த மீனவர்களை காணவில்லை. சாம்பல் கழிவால், ஆறு ஆழம் குறைந்து மேடாகி விட்டது. உணவில் நஞ்சு கலந்து விட்டது.சாஜிதா, எண்ணுார்: இறால், மீன்கள் வரிசையில் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக வடசென்னை மாறி வருகிறது.

அலையாத்தி காடுகள் முழுமையாக பாதித்துள்ளன.இதை நம்பியுள்ள நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்பகுதியில் கொரோனா காலத்தில் உயிரிழப்புகள் அதிகம். அது கொரோனா மரணங்களா; இந்த சாம்பல் கழிவால் ஏற்பட்ட சுவாச பிரச்னையால் ஏற்பட்ட மரணங்களா என தெரியவில்லை. எங்கள் வாரிசுகளையாவது வாழ விடுங்கள்.சீனிவாசன், காட்டு குப்பம், எண்ணுார்: வழக்கு தொடர்ந்தவர்களில் நானும் ஒருவன். சாம்பல் கழிவால் பெரும் பாதிப்பு உள்ளதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில், 20 லோடு சாம்பல் கழிவுகள் ஆற்றில் கலக்கிறது.20 ஆண்டுகளாக இதே நிலை தான் என்றால், பிரச்னையின் வீரியம் புரியும். தரமான குழாய் அமைக்க வேண்டும். விதிகளை சரியாக பின்பற்றவில்லை. இனி எந்த சாம்பல் கழிவுகளையும் ஆற்றில் கொட்டக்கூடாது. மருத்துவ வசதியை மேம்படுத்த வேண்டும்.மீனவ பெண்கள் உடலளவில் கடுமையாக பாதித்துள்ளனர். வல்லுனர் குழுவில், உள்ளூர் மக்களும் ஒரு அங்கத்தினராக இருக்க வேண்டும்.விஷ்வஜா, மருத்துவர், சென்னை: சாம்பல் கழிவால் ஆற்றுக்கு மட்டும் பிரச்னையில்லை. சுற்றியிருக்கும் குடியிருப்பு வாசிகளின் உணவிலும் நஞ்சு புகுந்து விட்டது. காயபோடும் துணியில் படிகிறது. நுரையீரல் மட்டும் பாதிக்கவில்லை; மொத்த உடலும் பாதிக்கிறது. குறை பிரசவம், எடை குறைவான குழந்தை பிறப்பு போன்ற பிரச்னைகள் உள்ளன. சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்திற்கே செலவாகிறது. இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.ஜெயகுமார், காட்டுகுப்பம், எண்ணுார்: சாம்பல் கழிவால் சீரழிந்து போன ஒட்டுமொத்த ஆற்றையும் மறு சீரமைத்து கொடுக்க வேண்டும்.கல்வி, மருத்துவம், கல்லுாரி, விளையாட்டு திடல், பூங்கா என, எந்த வளர்ச்சியையும் காணாத வடசென்னை. சாம்பல் கழிவுகளால் அழிவது ஏற்புடையதல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பிரச்னை தீர வாய்ப்பு!

சாம்பல் கழிவு பிரச்னையை நானே நேரில் பார்த்து உணர்ந்தேன். எங்கள் குழுவில் இதை பற்றி பிஎச்.டி., செய்த நரசிம்மன் உள்ளார். உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. குழுவிற்கான அதிகாரத்திற்குட்பட்டு, அறிக்கை தயார் செய்து சமர்பிக்கப்படும். பிரச்னையை தீர்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்வாழ்வு அமையும் வகையில் குழுவின் அறிக்கை இருக்கும்.- சாந்த ஷீலா நாயர்,ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி,வல்லுனர் குழு தலைவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X