தமிழகத்தில் டாஸ்மாக் 'பார்'களை ஏலம் விடுவதில், 'மெகா' முறைகேடுகள் நடந்து வருகின்றன. சிண்டிகேட் அமைத்து டெண்டர் எடுத்து அரசு கஜானாவுக்குப் போகும் வருவாய் தடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள, 5400க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகளில், 4500க்கும் மேற்பட்ட கடைகளில் 'பார்'கள் உள்ளன. இந்த 'பார்'களுக்கு மாவட்ட வாரியாக டெண்டர் விடப்படுகின்றன. மதுக்கூடத்திற்கான (பார்) குத்தகைத் தொகை, அந்த மதுக்கடையின் மது விற்பனையின் அளவைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். ஆண்டுதோறும் இந்தத் தொகை உயரும். பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. முறையாக 'பார்'களுக்கான குத்தகைத் தொகையும் வசூலிக்கப்படவில்லை.
தற்போது 41 டாஸ்மாக் மாவட்டங்களில் உள்ள 4500க்கும் மேற்பட்ட 'பார்'களில், 2600 பார்களில் தின் பண்டங்களை விற்பதற்கான ஏலம் நடந்து வருகிறது. இந்த ஏலம் முறைப்படி நடத்தப்பட்டால் அரசுக்கு இருநுாறு கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்; ஆனால், கண் துடைப்பாகவே நடத்தப்பட்டு வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மதுக்கடைகள் இருக்கும் நிலையில், அதில் பாதியளவு 'பார்'களுக்கு மட்டுமே டெண்டர் நடக்கிறது. அதிலும் எல்லோரும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதில்லை. வெளியாட்கள் டெண்டர் போட வந்தால் அலுவலகத்திற்குச் செல்லவே போலீசார் அனுமதிப்பதில்லை.

முக்கிய புள்ளியின் சகோதரர் மற்றும் மூலனுார் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவர்தான், ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 'பார்'களை ஏலம் விடும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 'பார்'கள், இவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்களுக்கே ஒதுக்கப்படுகிறது. இவர்கள் 'செட்டப்' செய்த சிலருக்கு மட்டும் நேரில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன; இவர்களே ஆட்களை வைத்து 'ஆன்லைன்' முறையிலும் விண்ணப்பங்களை எடுத்துள்ளனர்.
டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் உள்ள 'பார்'களுக்கு மாதந்தோறும் இரண்டரை லட்ச ரூபாய் வரை குத்தகைத் தொகை செலுத்த வேண்டும். பிற நகரங்களில் ஒன்றரை லட்ச ரூபாய் வரை இருக்கும். மாதந்தோறும் ஆளும்கட்சியினருக்கு மாமூல் தர வேண்டும்.வெறும் தின் பண்டங்கள் விற்றால் ,அரசுக்கு 'டிடி'யும் செலுத்தி, மாமூலும் கொடுத்து லாபம் பார்க்க முடியாது. அதனால் அதிக விலையில் விற்பதோடு, கடை மூடப்பட்ட நேரங்களில் சரக்குகளையும் விற்பார்கள்; அதில்தான் கொள்ளை லாபம். அதைக் கணக்கிட்டே இந்த 'மெகா' வசூல் நடக்கிறது.
இப்போது 'பார்'களை எடுப்பவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு இவற்றை நடத்துவதற்கு அட்வான்ஸ் ஆக 10லிருந்து 15 லட்ச ரூபாய் தர வேண்டும். அதைத் தவிர்த்து, பெருநகரங்களில் இரண்டரை லட்சமும், மற்ற நகரங்களில் 80 ஆயிரமும் மாதாந்திர மாமூல் தரவேண்டும். இத்துடன் அரசுக்கான குத்தகைத் தொகையையும் செலுத்த வேண்டும். இந்த அடிப்படையில்தான், மூவர் கூட்டணி மாநிலம் முழுவதும் 'பார்'களை டெண்டர் விட்டு வருகிறது. ஒரு டாஸ்மாக் மாவட்டத்தில் 100 பார் இருந்தால், அதை நான்கு பேர் ஆளுக்கு 25 என்று பிரித்துக்கொண்டு, வெவ்வேறு பெயர்களில் ஏலம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் நேரடியாக 'பார்' நடத்த மாட்டார்கள். உள்குத்தகைக்கு எடுப்பவர்கள்தான், டிடி, மாமூல், அட்வான்ஸ் அனைத்தும் தரவேண்டும்.
முறைப்படி டெண்டர் விடப்படும் 2500 'பார்'களைத் தவிர்த்து, 1900க்கும் அதிகமான 'பார்'கள், சட்டவிரோதமாக நடத்தப்படவுள்ளன. அவற்றை எடுத்து நடத்துவோர், அரசுக்கு 'டிடி' செலுத்தும் அவசியம் இல்லை. ஆனால் மாமூல், அட்வான்ஸ் நடைமுறை அவர்களுக்கும் இதேதான்.உண்மையில் முறையாக டெண்டர் விட்டால், அரசுக்கு 160 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும். இப்போது அதில் பாதி கூட அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பில்லை. மீதித்தொகை, குறிப்பிட்ட சில நபர்களுக்குப் போகப்போகிறது. முதல்வர் நினைத்தால் இப்போதே இந்த 'மெகா' முறைகேட்டை தடுத்து, அரசின் கஜானாவில் நிதியைச் சேர்க்க முடியும். இவ்வாறு அந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ''தமிழகம் முழுவதும் 5400 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் 'பார்'கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மூவாயிரம் 'பார்'களுக்கு தற்போது ஏலம் விடப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர், 'ஆன்லைன்' விண்ணப்பங்களையும் 'டவுன்லோடு' செய்துள்ளனர். டெண்டர் விண்ணப்பங்களை போடவிடவில்லை என்பது தவறான தகவல்.நாங்கள் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் நோக்கோடு, வெளிப்படையாகத்தான் 'பார்' டெண்டர்களை நடத்தி வருகிறோம். எந்த மாவட்டத்தில் இருந்தும் எங்களுக்கு நீங்கள் சொல்வது போன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை!'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE