சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அவரின் வழியில் செல்லலாமே!

Added : டிச 31, 2021 | கருத்துகள் (1)
Advertisement
அவரின் வழியில் செல்லலாமே!வி.மீனாட்சி சுந்தரம், பறக்கை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி... பெயரில் என்னே ஒரு ஒற்றுமை...இரண்டு வல்லவர்களும் சில ஆண்டுகளுக்கு முன் வரை, அ.தி.மு.க., என்ற ஒரே குட்டையில் குப்பை கொட்டியோர் தான்!இருவரும், அமைச்சர் பதவியில் இருந்த போது, தாங்கள் சார்ந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக


அவரின் வழியில் செல்லலாமே!வி.மீனாட்சி சுந்தரம், பறக்கை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி... பெயரில் என்னே ஒரு ஒற்றுமை...
இரண்டு வல்லவர்களும் சில ஆண்டுகளுக்கு முன் வரை, அ.தி.மு.க., என்ற ஒரே குட்டையில் குப்பை கொட்டியோர் தான்!இருவரும், அமைச்சர் பதவியில் இருந்த போது, தாங்கள் சார்ந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கியுள்ளனர்.
வாக்களித்தபடி வேலை வாங்கி தந்திருந்தால், அப்பாவி இளைஞர்களிடம் பணம் வசூலித்திருப்பது, காதும் காதும் வைத்தது போல, மூன்றாம் நபருக்கு தெரியாமல் முடிவுக்கு வந்திருக்கும்.
என்ன கிரகக் கோளாறோ, இரு வல்லவர்களாலும் பணம் கொடுத்த இளைஞர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தர முடியவில்லை.இரு வல்லவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்து விட்டார்.
செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஒருவர், நீதிமன்ற படியேறினார். அவரிடம் ஆதாரம் இருந்ததால், தி.மு.க.,வால் ஏதும் செய்ய முடியவில்லை. இந்த வழக்கு, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கே உலை வைக்க காத்திருந்தது.
இதனால், சாதாரண பஞ்சாயத்து பேசி வாங்கிய பணத்தை திருப்பித் தருவதாக, செந்தில் பாலாஜி ஒப்புக் கொண்டு, வழக்கில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்; அமைச்சர் பதவியும் ஆட்டம் காணாதவாறு காய் நகர்த்தி, 'செட்டில்' ஆகி விட்டார்.
இரண்டாவது வல்லவனான ராஜேந்திர பாலாஜி, ஏன் இப்படி ஊர் ஊராக தலைமறைவாக திரிந்து கொண்டிருக்கிறார்; ஒளிந்து கொண்டிருக்கிறார்?
வழிகாட்டும் ஒளி விளக்காய் செந்தில் பாலாஜி கடைப்பிடித்த வழி இருக்கவே இருக்கிறது. அதே வழியை பின்பற்றி, பணம் வாங்கியோரிடம் அந்த தொகையை திருப்பிக் கொடுத்து, வழக்கிலிருந்து
விடுபடலாமே!இன்னும் ஏன் என்ன தயக்கம்?செந்தில் பாலாஜியின் வழியை, ராஜேந்திர பாலாஜியும் கடைப்பிடிக்கலாமே!


தி.மு.க.,வுக்கு அறுவை சிகிச்சை!டி.அண்ணாமலை, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மருந்து, மாத்திரையால் குணப்படுத்த முடியாத நோய்க்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை
மேற்கொள்வது வழக்கம்.தமிழக மக்களும், மருத்துவர் போல அப்படியொரு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு
உள்ளனர்.'மூர்க்கனும், முதலையும் கொண்டது விடா' என்று ஒரு பழமொழி உண்டு.தமிழக மக்கள் காலம் காலமாக கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளை, 'தமிழ் புத்தாண்டு' என மாற்றி, குட்டையைக் குழப்பி, அதில் மீன் பிடிக்க, தி.மு.க., அரசு துடிக்கிறது.
ஏற்கனவே கருணாநிதி ஆட்சி காலத்தில் இப்படி அறிவிக்கப்பட்டது. அடுத்து ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதாவால், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, ஓரங்கட்டப்பட்டது.
கருணாநிதியின் அறிவிப்பைத் தான், அவரின் மகனும், முதல்வருமான ஸ்டாலின் தற்போது கையில் எடுத்துள்ளார்.'சித்திரை ௧ம் தேதியான தமிழ் புத்தாண்டை, தை மாதத்திற்கு மாற்றியே தீருவோம்' என குதித்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசுக்கு, தமிழக மக்கள் புத்தி புகட்ட வேண்டும்.
முள்ளை முள்ளால் எடுப்பது போல, இந்த, 'தமிழ் புத்தாண்டு' தின அறிவிப்பை, 'முப்பெரும் விழா' என்பதன் மூலம் முடக்கி விடலாம்.தி.மு.க.,வின் எதிரியான அ.தி.மு.க.,வும், அந்த அறுவை சிகிச்சைக்கு துணை நிற்க வேண்டும்.ஆண்டுதோறும் செப்., 15ம் தேதியை, ஈ.வெ.ரா., பிறந்த நாள், அண்ணாதுரை பிறந்த நாள், தி.மு.க., உதயமான நாள் என்று ஒன்றாக்கி, முப்பெரும் விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் தி.மு.க., கொண்டாடும்.
தி.மு.க., தோன்றிய நாள் வேண்டுமானால், அ.தி.மு.க.,வுக்கு சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால், ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை பிறந்த நாட்களை, அ.தி.மு.க., விலக்கி வைக்க முடியாது.
தி.மு.க., தோன்றிய நாளுக்கு பதிலாக எம்.ஜி.ஆர்., அல்லது ஜெயலலிதா பிறந்த நாளை இணைத்து கொள்ளலாம். இனி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளை, 'முப்பெரும் விழா'
என்ற பெயரில் கொண்டாடத் துவங்கினால் போதும்... தி.மு.க.,வின் ஆணிவேரே ஆட்டம் கண்டு விடும்.அடாவடி நோக்கத்திற்கு, அதிரடி முடிவே சிறந்த பயனைத் தரும். இந்த முப்பெரும் விழா அறிவிப்பை, அ.தி.மு.க., வெகு விரைவில்
வெளியிட வேண்டும்.இந்த அறுவை சிகிச்சையை, அ.தி.மு.க., மேற்கொண்டால் போதும், தி.மு.க.,வினர், பொங்கல் திருநாளில் கைவைக்க மாட்டார்கள்.


தமிழக அரசிற்கு வேகம் போதாது!வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் இன்னும், 90 லட்சம் பேர் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சமீபத்தில்
கூறியுள்ளார்.'தமிழகத்திற்கு போதிய தடுப்பூசி அனுப்பவில்லை' என்று மத்திய அரசை குறை கூறிக்கொண்டிருந்தது தமிழக அரசு. ஆனால், தற்போது தேவையான அளவு தடுப்பூசியை பெற்ற பிறகும், அதை செலுத்திக் கொள்ள மக்கள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறுகிறார், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.
கொரோனா இரண்டாவது அலை ஓயும் நிலையில், 'ஒமைக்ரான்' பரவ ஆரம்பித்துள்ளது. ஆனால், தமிழக அரசோ தடுப்பூசி போடுவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கிறது.
ரயில் மற்றும் பேருந்து நிலையம், மார்க்கெட், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் வாரந்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்கள், பயனாளிகள் யாரும் வராமல் காற்று வாங்குகின்றன; இதனால் ஏராளமான தடுப்பூசிகள் வீணாகும் வாய்ப்பு
உள்ளது.ஆரம்பத்தில் இருந்தது போல, பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை.எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட வேண்டும்.இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவருக்கு, ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும்; இலவச பொங்கல் பை வழங்கக் கூடாது.
தடுப்பூசி விஷயத்தில் மற்ற மாநில அரசுகள், சில கட்டுப்பாடுகளை விதித்து மக்களை வழிக்கு கொண்டு வருகின்றன. ஆனால், தமிழக அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து, புலம்புகிறது.தடுப்பூசி பெற, மத்திய அரசிடமிருந்து போராடிய வேகத்தை, அதை பொதுமக்களுக்கு செலுத்துவதில் தமிழக அரசு காட்டவில்லை.


செய்வன திருந்தச் செய்!ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்டில், 'வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும்' என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நேர்மையாக நடக்க, இந்த திட்டம்
பயனளிக்கும். ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்க்கின்றன. பார்லிமென்டில், இம்மசோதாவை விவாதத்திற்கு எடுத்து கொள்ளாமல், 'முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்' என்று கூக்குரலிட்டன.இந்த மசோதாவில் என்ன குறை கண்டனர்?நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கும் யாரும் இந்த மசோதாவை எதிர்க்க மாட்டார்கள். ஜனநாயகத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தால், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து, இந்த மசோதாவை நிறைவேற்றியிருக்க
வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏன் எதிர்க்கின்றன?வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைந்து விட்டால், தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது. அது, அக்கட்சிகளை பாதிக்கும் என்பதாலா?இப்போது வங்கி கணக்குடன், ஆதார் எண் இணைப்பு செய்யவில்லையா?மொபைல் போன், 'சிம்' வாங்கும் போது, ஆதார் எண் கேட்பதில்லையா?கல்வி நிலையம், வேலை வழங்கும் நிறுவனம் என அனைத்து இடங்களிலும் ஆதார் எண் பெறப்படுகிறது.வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் உடன் இணைப்பது அவசியம் என்று உத்தரவிட வேண்டும். அவ்வாறு இணைக்காதவர், தேர்தலில் ஓட்டு அளிக்க முடியாது என்பதை உறுதி செய்ய
வேண்டும்.அதை விடுத்து, பெயரளவில் சட்டத்தை போட்டு, விருப்பமுள்ளவர் மட்டும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று சொன்னால், அதனால் எந்த
பயனும் இல்லை.செய்வன திருந்தச் செய்!


எம்.பி.,க்களுக்கு பாடம் எடுக்கணும்!சி.ஆர்.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை, ஒரு நாள் முன்னதாகவே முடித்து வைக்கும் அளவிற்கு, நம் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அநாகரிகமாக செயல்பட்டுள்ளனர். அடுத்த கூட்டத் தொடரில் எப்படி எல்லாம் அராஜகம் செய்யலாம் என, இப்போதே யோசிக்க ஆரம்பித்து இருப்பர்.
தற்போதைய எம்.பி.,க்களில் பெரும்பாலானோர் பட்டம் பெற்றவர்கள்; இவர்களுக்கு, நம் தேசத்தின் வரலாறு குறித்து நன்கு தெரிந்திருக்கும்.ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து, எவ்வளவு தியாகம் செய்து, சுதந்திரம் பெற்றோம் என்பதையும்; நம் நாடு, உலக அரங்கில் நிமிர்ந்த நடையோடு வலம் வர, நம் தலைவர்கள் எவ்வளவு போராட்டத்தை சந்தித்தனர் என்பதையும், எம்.பி.,க்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்.மேலும், பார்லிமென்ட் என்றால் என்ன, அதன் கடமைகள் என்னென்ன, மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என்ன என்பது குறித்தும், அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.ஜனநாயகம் பாழ்பட்டால் தேசம் என்னவாகும் என்பதையும், அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.பார்லிமென்ட் செயல்பாட்டில் சறுக்கல் ஏற்பட்டால், அண்டை நாடுகளிடையே அது எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், நம் எம்.பி.,க்கள் உணர்ந்தால் தான், அவர்கள் தங்கள் கடமையை சரியாக
செய்வர்.இனிவரும் கூட்டத் தொடராவது, அதன் நிகழ்ச்சி நிரல்படி நடந்தேற வழி பிறக்குமா என, அப்பாவி மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதை மக்கள் பிரதிநிதிகள் புரிந்து கொள்வரா?இனி பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன், நம் தேசத்தின் வரலாறு, பொருளாதார முன்னேற்றம், அண்டை நாடுகளுடனான உறவு போன்றவை பற்றிய தெளிவுகளை, எம்.பி.,க்களின் உள்ளங்களில் பதிய வைக்க முயல வேண்டும்.
பார்லிமென்ட் விவாதம் என்பதனுடைய அதீத ஆற்றல் எத்தகையது என்பதை, அவர்கள் உணரச் செய்ய வேண்டும்.இனி நடக்கவிருக்கும் கூட்டத் தொடரை அமைதியாகவும், ஆக்கபூர்வமான விவாதங்களுடனும், நாட்டின் இறையாண்மைக்கும் பங்கமில்லாத வகையிலும் நிகழ்ந்தேற எம்.பி.,க்கள் ஒத்துழைக்க வேண்டும்.


சிலை மட்டும் போதுமாமே!என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., பொதுச்செயலராக, 50 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் அன்பழகனின் நுாற்றாண்டு விழாவை மிகவும் தடபுடலாகக் கொண்டாடப்பட்டது.தன் பெற்றோர் வைத்த, 'ராமையா' என்ற பெயரை மாற்றி துாய தமிழில், 'அன்பழகன்' என சூடி கொண்டவர் இவர்.அவரை போலவே சோமசுந்தரம், 'மதியழகன்' ஆனார்; நாராயணசாமி, 'நெடுஞ்செழியன்' ஆனார்; வேதநாயகம், 'மறைமலை அடிகள்' ஆனார்.
இப்படி, 'திராவிடச் செம்மல்கள்' எல்லாம், தங்கள் பெற்றோர் சூட்டிய பெயர் அசிங்கமாக இருக்கிறது என்று காரணம் காட்டி, தங்களது தமிழ் பற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட துாய தமிழில் பெயர் மாற்றம் செய்து கொண்டனர்.'திராவிடம்' என பிரசாரம் செய்து, அதிக பலனடைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி மட்டும், தன் பெயர் சமஸ்கிருத சொல்லாக இருந்தாலும், அதை தமிழில் மாற்றி கொள்ளவில்லை. அது ஏன் என யாரும் கேள்வி கேட்கவில்லை.
தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, 'அண்ணா அறிவாலயம்' என்று பெயர் சூட்டினர்; அப்போது, 'ஆலயம்' என்ற வடமொழிச் சொல், திராவிட கொள்கையாளர்களுக்கு இனித்தது!தி.மு.க.,வின் சின்னமான, 'உதயசூரியன்' என்பது கூட, வடமொழி சொல் தான்.கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும் தொழில் நிறுவனங்களின் பெயர்கள் அனைத்தும், ஆங்கிலம் மற்றும் வடமொழியில் தான் உள்ளன.'தமிழ், திராவிடம்' என பேசி, பேசியே ஆட்சி, அதிகாரத்தை அனுபவித்த கருணாநிதி குடும்பம், ஆங்கிலம் மற்றும் வடமொழியில் தான் நிறைய பயனை பெற்றது.
அதாவது, 'ஊருக்குத் தான் உபதேசம்; எனக்கு இல்லேடி கண்ணே...' என்பது, இவர்களின் சித்தாந்தம்.தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு இருந்த திறமை, அக்கட்சி செயலராக இருந்த அன்பழகனுக்கு இல்லை. அதனால் தான், அவரின் வாரிசுகள், கட்சி பதவிகளை பிடிக்க முடியவில்லை.கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்து, குபேர வாழ்க்கை வாழ அன்பழகனுக்கு சாமர்த்தியம் போதாது.அதனால் தான், கருணாநிதிக்கு பல கோடி ரூபாய் செலவழித்து நுாலகம் அமைக்கப் போகும் முதல்வர் ஸ்டாலின், அன்பழகனுக்கு சிலை மட்டும் போதும் என முடிவெடுத்து விட்டார் போலும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஜன-202219:39:21 IST Report Abuse
D.Ambujavalli தானும், தனது நாலு தலைமுறையும் 'ஆண்டைகளாக' இருக்க தொண்டர்கள், விசுவாசிகளுக்கு 'இதயத்தில் இடம் கொடுக்கும் ' பரந்த மனம் உள்ளவரின் மகனாயிற்றே இதைத்தான் எதிர்பார்க்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X