தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை: முறையில்லாத மழைப்பொழிவு தமிழகத்தை பாதித்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசு, தமிழக அரசு கேட்கும் உதவிகளை தாமதமில்லாமல் தர வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை உறுதி செய்ய வேண்டும்.அப்படியே, 'நீர் போக்கு, நீர்வரத்து கால்வாய்களை முறையாக துார் வார வேண்டும். அந்த பணத்தில் ஊழல், முறைகேடுகள் செய்யக் கூடாது' என, தமிழக அரசுக்கு அறிவுரை கூறுங்களேன் பார்ப்போம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேச்சு: நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை நம் கட்சியினருக்கு வர வேண்டும். கூட்டணி கட்சியினரிடம் பேச்சுக்கு செல்லும் நம் நிர்வாகிகள், அவர்களிடம் ஏதோ பேசிவிட்டு வந்தோம் என்றில்லாமல், விரும்பியதை கேட்டு பெறும் சாமர்த்தியத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.தேர்தலுக்கு தொகுதி பங்கீடு கேட்ட பின், தி.மு.க.,வின் அறிவாலயத்திலிருந்து வெளியே வந்து யாரோ கதறி அழுதாங்களே... யார் சார் அது?
மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேட்டி: நீலகிரியில் ஆறு வகை பழங்குடியினர், வனத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். வன உரிமை சட்டத்தை அமல்படுத்தி, 15 ஆண்டுகள் ஆனாலும், பழங்குடியினரின் பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன; எல்லா பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும்.பழங்குடியினர் மட்டுமல்ல... எல்லா இனத்தவருக்கும் பிரச்னைகள் உள்ளன. அனைத்தையும் தீர்க்கும் ஒரே மருந்து, உண்மையான சமதர்மம், சம உரிமை தானே!
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு பேச்சு: நீரின் முக்கியத்துவம் குறித்து 2,000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர், எழுதியுள்ளார். அதற்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை எழுதி உள்ளார். அதில், 'நீர் இல்லை என்றால் சட்டம் - ஒழுங்கு கெடும்' எனக் கூறியுள்ளார்.கருணாநிதி கூறுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் சமய பெரியவர்களும், சான்றோரும், ஆன்றோரும் எழுதியுள்ளனர்; நேரம் கிடைக்கும் போது அதையும் படியுங்களேன்!
திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களாக நடக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, திராவிடர் தொடர் ஆட்சியாகவும், வரலாற்றின் பொற்காலத்தில் பதிய வைக்க வேண்டிய அரசாகவும் திகழ்கிறது.பிறரை விட, நம் பாராட்டு தான் சிறப்பானதாக இருக்க வேண்டும் என எண்ணி, சிந்தனையை அதற்காக செலவிட்டு, அறிக்கை தயாரிப்பீர்கள் போலிருக்கிறதே!
தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேச்சு: உலகில் எந்த நாட்டிலும் ஒரே நிறுவனத்துக்கு, விமான நிலையம், துறைமுகம், மின்சாரம் ஆகியவற்றை கொடுக்க மாட்டார்கள். ஆனால் மோடி அரசு, தொழிலதிபர் அதானிக்கு மட்டும் அனைத்து துறைகளையும் கொடுத்து வருகிறது.என்னாச்சு உங்களுக்கு? அதானியை எதிர்க்கிறீர்கள்... தனியார் கல்வி நிறுவனமான பைஜுவை எதிர்க்கிறீர்கள்... ஆனால் விளக்கமாக எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. சூட்சுமம் என்னவோ?
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை: ஸ்டாலின் மேயர் என்றால், சிங்காரச் சென்னை; முதல்வர் என்றால் சிங்கார தமிழகம் என மாறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.நடிகர் ரஜினிகாந்துக்கு கொடி பிடிச்சிட்டிருந்தீ்ங்க... அவர் கட்சி துவங்கலேன்னு சொன்னதும், அணி மாறிட்டீங்க... ஆக மொத்தம், புகழ்ந்து தள்ளுறதுல, உங்களை மிஞ்ச, வேறு எந்த அரசியல்வாதியாலயும் முடியாதுன்னு புரியுது!
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஒரு மாநிலத்துக்கு முதல்வராக இருக்கும் ஸ்டாலின், வீடு வீடாகச் சென்று, அவர் சார்ந்துள்ள தி.மு.க.,வுக்கு உறுப்பினர்களை சேர்த்துள்ளார். இது, தவறான முன்னுதாரணம். முதல்வராக இருப்பவர், ஒட்டுமொத்த மக்களுக்கும் நடுநிலையானவராக இருக்க வேண்டும்.சபாஷ்! உங்களுக்கு மட்டும் உடல்நிலை நல்லா இருந்தா, நீங்க தான் ஆட்சியில அமர்ந்திருப்பீங்க அல்லது எதிர்க்கட்சியாகவாவது இருந்து, 'பின்னி' பெடல் எடுப்பீங்க... ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்!
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா பேட்டி: சமீபத்தில் டில்லியில் உள்ள கியூபா நாட்டின் துாதரகத்திற்கு, நம் எம்.பி.,க்கள் சிலரை அழைத்திருந்தனர்; நானும் சென்றேன். என்னை அறிமுகப்படுத்திய போது, 'உங்கள் மாநிலத்தின் சி.எம்., ஸ்டாலின் அல்லவா!' என்ற துாதர், என் தோள் மீது கைபோட்டு நட்புடன் உறவாடினார்.நல்லவேளை, நீங்கள் அமெரிக்கஅதிபர் ஜோ பைடனை சந்திக்கவில்லை. சந்தித்திருந்தால், அவரும், ஸ்டாலின் புகழை வெகுவாக பாடியிருப்பாரோ!
தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு: உலக சரித்திரத்தில், ஏன்... இந்திய சரித்திரத்தில், 90 ஆயிரம் எதிரி நாட்டுப் படை, இந்திய படையிடம் சரணடைந்தது என்றால், 5,000 ஆண்டு கால இந்திய சரித்திரத்தில் அது, இந்திரா ஆட்சிக் காலத்தில் தான் முதன்முதலாக நடந்தது.உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலே? அகிம்சை முறையில் உலகையே கட்டிப் போட்ட காந்தியையே மறந்துட்டீங்களே!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி: நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகம்.உங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம் சொல்லி, தேர்தல் முறையை மாற்றச் சொல்வீர்கள் போல இருக்கிறதே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE