ஊ.ம., தலைவர்களுக்கு வலை வீசும் பா.ஜ.,
''எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.நாயர் கொடுத்த இஞ்சி டீயை, நண்பர்கள் பருக
ஆரம்பித்தனர்.
''மணல் கொள்ளை திரும்ப ஆரம்பமாகிடுச்சுங்க...'' என்ற அந்தோணிசாமியே, முதல் தகவலை சொல்ல ஆரம்பித்தார்...
''கர்நாடகா, ஆந்திர மாநிலத்துல பெஞ்ச மழையால, கடந்த மாதம் பாலாற்றுல வெள்ளம் கரைபுரண்டு ஓடிச்சு... அதனால், அங்க மணல் கொள்ளை
நடக்கலைங்க...
''இப்போ பாலாற்றுல தண்ணீர் ஓடலை... அதனால மணல் கொள்ளைக்காக, 24 மணி நேரமும் லாரி ஓடுது...
''திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பாலாற்றுல இருந்து பெங்களூருக்கும், வேலுார், ராணிப்பேட்டை பாலாற்றுல இருந்து சென்னைக்கும் மணல் கடத்துறாங்க... ஒரு லோடு மணல், 40
ஆயிரம் ரூபாய்க்கு விற்குறாங்க...
''அதிகாரிளையும், ஆளுங்கட்சியையும் 'செமை'யா 'கவனிச்ச'தால, யாரும் மணல் கொள்ளைய கண்டுக்கலைங்க...'' என முடித்தார்,
அந்தோணிசாமி.
''இப்பவே கண்ணை கட்டுதே பா...'' என்றபடியே அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''ஏன்... அப்படி என்ன விஷயம்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''வேலுார் தோட்டப்பாளையத்துல இருக்குற தனியார் நகைக்கடையில, 14ம் தேதி கொள்ளை நடந்துச்சு பா...
''நகைக்கடை சார்புல, 30 கி., கொள்ளை போனதாக தெரிவிச்சாங்க... ஆனால் போலீசார், 16 கி., கொள்ளை போனதா வழக்கு பதிவு செஞ்சாங்க பா...
''கொள்ளை போன நகையோட மதிப்பு, 4 கோடி ரூபாய்ன்னு போலீசார் சொன்னாங்க... வேலுார் டி.ஐ.ஜி., பாபு பேட்டி அளிச்சப்போ, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள்ன்னு சொன்னாரு பா...
''இப்போ என்னன்னா, எஸ்.பி., அலுவலக செய்தி குறிப்புல, 10 கோடி ரூபாய்ன்னு போட்டுருக்கு பா...
''உண்மையிலேயே எவ்வளவு நகை கொள்ளை போனதுன்னு தெரியாமல், நிருபர்கள் எல்லாம் முழிக்கிறாங்க பா...'' என மூச்சு வாங்கினார், அன்வர்பாய்.
''அப்போ கண்ணை கட்டத் தான் செய்யும் ஓய்... '' என்ற குப்பண்ணாவே, ''ஊராட்சி மன்ற தலைவர்களை இழுக்கற வேலையில இறங்கியிருக்கா ஓய்...'' என கடைசி தகவலுக்கு மாறினார்.
''யாரு, எதுக்கு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''தமிழகம் முழுதும், ஊராட்சி மன்ற தேர்தல் நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு... ஊராட்சி மூலமா நடக்கற பணிகள்ல, 80 சதவீதம் மத்திய அரசின் நிதி மூலமே நடக்கறது ஓய்...
''ஆனால் இந்த நிதியை, கடந்த ஆட்சியில், ஊ.ம., தலைவர்களுக்கு நேரடியா கொடுக்காம, கலெக்டர், திட்ட அலுவலர், பி.டி.ஓ.,க்கள் என அதிகாரிகளே பிரிச்சு வச்சு குடுக்கறா மாதிரி, 'கமிஷன்' வாங்கினா ஓய்...
''மின் விளக்கு, குடிநீர் குழாய் பழுது போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கான நிதியையும், ஊராட்சிகளுக்கு இன்னும் கொடுக்கலை... இதனால, அ.தி.மு.க., மேல, ஊ.ம., தலைவர்கள் அதிருப்தியில இருக்கா ஓய்...
''தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், யூனியன் சேர்மன்கள் அதிகாரம் ஓங்கி, ஊ.ம., தலைவர்களை ஓரங்கட்டறா... இதனால அவா மேலயும், ஊ.ம., தலைவர்கள் கடுமையான கோபத்துல இருக்கா...
''இதை தெரிஞ்சுண்ட, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க., ஆட்சியின் தில்லுமுல்லுகளை, ஊ.ம., தலைவர்கள் மூலம் வெளிப்படுத்தணும்ன்னு சொல்லியிருக்கார் ஓய்...
''இதனால ஊ.ம., தலைவர்கள் பலர், பா.ஜ.,வுக்கு தாவ தயாராகிட்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
********************
கரும்பு விலையில் பங்கு கேட்பது யார்?
''செம அப்செட்டில் இருக்காங்களாம் பா...'' என, புத்தாண்டையும் மீறி, சோகம் கிளப்பினார் அன்வர்பாய்.
''பட்டுன்னு மேட்டருக்கு வாங்க... சோகமெல்லாம் வேணாம்...'' என்றார் அந்தோணிசாமி.
''கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்னு என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி வந்துச்சே... ரெண்டு மாசத்துக்கு முன்ன, இதுக்கான உத்தரவு வந்துச்சு...
''பயனாளிகளை தேர்வு செய்யிற வேலையை, வேறு துறை அதிகாரிகள் தான் செஞ்சாங்க... ''மொத்தம், 13.47 லட்சம் பேருக்கு தான் இது கிடைக்கும்னு தெரிஞ்சதும், 36 லட்சம் பேர் அப்செட்... வங்கிகளை தொளைச்சு
எடுக்கிறாங்க...
''கூட்டுறவு இணை, துணை பதிவாளர்களுக்கு 'போன்' மேல போன் வருது... அவங்களோ, 'எங்களுக்குத் தெரியாது'ன்னு சொல்லி, போனை, 'சுவிட்ச் ஆப்' செஞ்சுடறாங்க பா... எல்லாரும் செம அப்செட்...'' என, விளக்கினார்
அன்வர்பாய்.
''யூனியன், பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள் எல்லாம், கட்சி மாறத் தயாராகிட்டிருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்குத் தாவினார் அண்ணாச்சி.
''எந்த மாவட்டத்துல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''பொதுவாவே, நிறைய இடத்துல நடக்குது... கோவை மாவட்டம் சூலுார்ல தன்னோட சேர்மன் பதவியை தக்க வச்சுக்க, பாலசுந்தரம் முடிவு பண்ணி இருக்காரு...
''இன்னிக்கிலேர்ந்து நாள் பாத்துட்டே இருக்காரு... அ.தி.மு.க.,காரரா இருக்கறதால, நாள் நட்சத்திரம்லாம் அத்துப்படி... வெகு சீக்கிரத்துல, தி.மு.க.,வுல சேரப் போறதா தகவல்...
''ஏற்கனவே சூலுார் யூனியனில் உள்ள நான்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள், தி.மு.க.,வுல சேர்ந்தாவ... இப்ப சில பேரூராட்சி, நகராட்சி தலைவர்களையும் கூட்டிட்டுப் போகப் போறாரு...
''முதல்வர் முன்னிலையில், சேர்ப்பு விழா நடக்கப் போகுது வே...'' என்றார் அண்ணாச்சி.
''எனக்குப் பங்கு குடுன்னு கேட்கறார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.
''ஜகஜ்ஜால கில்லாடி யாரு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''தேனி மாவட்டத்து ஆளுங்கட்சிக்காரர் ஓய்... பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் பங்கு கேக்கறார்...
''பொங்கல் தொகுப்பில் 21 ஐட்டம் இருக்கோல்லியோ... அதுல, ஒரு கரும்புக்கு 32 ரூபா கொள்முதல் விலைன்னா, 'விலையைக் குறைச்சு, எனக்கு கமிஷன் குடுங்கோ'ன்னு இவர் கேக்கறார்... முந்திரி, திராட்சை, ஏலக்காய்ன்னு சில ஐட்டத்திலயும் இவருக்கு பங்கு வேணுமாம்...
''கரும்புல, 10 எண்ணம் கொண்ட கட்டுக்கு 150 ரூவா தான் குடுப்போம்... குடுக்க மறுத்தா, வெளி மாவட்டத்துலேர்ந்து வாங்கிடுவோம்ன்னு அதிகாரிகளும் விவசாயிகளை மிரட்டறாளாம்... இந்த இக்கட்டுல மாட்டிக்கப்படாதுன்னு ஒரு அதிகாரி, 'மெடிக்கல் லீவ்' போட்டுட்டு போயிட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''பேரு என்னங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''வெளியில சொன்னா கட்சியிலேர்ந்து துாக்கிடுவான்னு, அதிகாரிகள் பயப்படறா ஓய்... அவா பதவிக்கு ஆபத்தாம்...'' என்றதும், 'ம்ர்ம்...' என உருமியபடியே கிளம்பினார் அந்தோணிசாமி. மற்றவர்களும்
நடையைக் கட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE