முனைவர் சுடர்க்கொடி கண்ணன்: 20ம் நுாற்றாண்டிற்கு முன், ஆயத்த ஆடை உடுத்துவது அரிதாக இருந்தது. 1960கள் வரை மக்கள், பண்டிகைக் காலங்களில் மட்டுமே ஆடைகளை வாங்கினர். 'ரெடிமேட்' ஆடைகளை வாங்காமல், புதுத் துணி எடுத்து தைத்து அணியும் வழக்கம் இருந்தது. நம் தாத்தா - பாட்டி வீடுகளில், ஆடைகளை எளிதில் அப்புறப்படுத்தவும் மாட்டார்கள். அண்ணனின் ஆடைகளைத் தம்பிக்கும், அக்காவின் ஆடைகளைத் தங்கைக்கும், அம்மாவின் பழைய புடவைகளை, வயது வந்த பெண்களின் தாவணியாகவும் மாற்றுவர். அத்துடன் விடாமல், அவை பழைய துணிகளாகி கிழியும் வரை பயன்படுத்துவர். அப்படியே அவை கிழிந்தாலும், அரதக் கந்தல் ஆகும் வரை, வீட்டைத் துாய்மை செய்யப் பயன்படுத்துவர்.இப்போது நிலைமை தலைகீழ். எல்லாம் 'பாஸ்ட் பேஷன்' ஆகி விட்டது. பாஸ்ட் பேஷன் பிராண்டுகளால் ஏற்படும் முக்கிய சிக்கல்கள் மற்றும் அவற்றின் சமூக சுற்றுச்சூழல் தாக்கம் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை.பெரும்பாலான பேஷன் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. கிழிந்த ஆடைகளை ஓடும் நதியில், நீர் நிலைகளில் சிலர் விட்டு விடுகின்றனர்.மட்கிப் போக முடியாத ஆடைகள், நீர் ஊற்று சுரக்கக் கூடிய இடத்தின் மேலே படிந்தால், நீர் சுரப்பு நின்று விடும்; இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த கஷ்டம் நம்மோடு போகாது. அடுத்தடுத்து வரக்கூடிய சந்ததியினரும் தண்ணீர் இல்லாமல், வறட்சியில் கஷ்டப்படும் அளவிற்கு பிரச்னைகள் பெரிதாகும். ஆகவே, பழைய துணிகளை ஓடும் ஆற்றிலோ அல்லது ஏரியிலோ, கடலிலோ போடாதீர்.துணிகளைத் துவைக்கும் போது பாலியஸ்டர் மற்றும் நைலான் போன்ற செயற்கைத் துணிகளிலிருந்து, 'மைக்ரோ பைபர்கள்' என்ற நுண்ணிய பிளாஸ்டிக்குகள் வெளியேறுகின்றன. இவை மீன்களால் உண்ணப்படுகின்றன. மீன்கள், நம்மால் உண்ணப்படுகின்றன. இந்த உணவு சங்கிலி நமக்கு பெரும் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்துகிறது.துணி ஆலைகளில் வேலை செய்வோர், ரசாயனங்களாலும், கழிவு நீரில் உள்ள ஆர்சனிக், குரோமியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றாலும், ஆஸ்துமா, நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.கண்ணுக்கு தெரியாமல் கேடுகளை தரும் பாஸ்ட் பேஷன், அழிவுகரமான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் உணர்ந்து, தேவையின்றி ஆடைகளை வாங்கிக் குவிக்காமல் இருக்கலாம்.முடிந்தவரை இயற்கை துணிகளை வாங்குங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE