புதுடில்லி:திபெத்திய மக்களின் நாடு கடந்த அரசு மற்றும் பார்லிமென்ட் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய எம்.பி.,க்களுக்கு அதிருப்தி தெரிவித்து சீன துாதரகம் கடிதம் எழுதியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எம்.பி.,க்கள், 'எங்களுக்கு கடிதம் எழுதவோ, எங்கள் செயல்பாடுகளில் தலையிடவோ சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை' என ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளனர்.
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு சீனா உரிமை கோரி வருகிறது. இந்தியா - சீனா இடையே 1962ல் போர் நடந்தது.அப்போது அருணாச்சல் மாநிலத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது. இந்த பகுதியை சீன ஆக்கிரமிப்பு பகுதி என்றே மத்திய அரசு இப்போதும் குறிப்பிட்டு வருகிறது.
ஏற்பாடு
திபெத்தை, சீனா 1959ல் ஆக்கிரமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுதந்திர திபெத் கோரியும் 14வது தலாய் லாமா தலைமையில் திபெத்தியர்கள் பலர் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். இவர்கள் தலாய் லாமா தலைமையில் திபெத்திய மக்களின் நாடு கடந்த அரசு மற்றும் பார்லிமென்டை ஹிமாச்சல பிரதேச மாநிலம் காங்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவில் 1959ல் நிறுவினர்.
இதை இந்தியா அங்கீகரித்தது. ஆனால், சீனா இதுரை அங்கீகரிக்கவில்லை.இந்நிலையில் திபெத்திய மக்களின் நாடு கடந்த அரசு மற்றும் பார்லிமென்ட் சார்பில், டில்லியில் கடந்த வாரம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திபெத்துக்கான இந்தியாவின் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவில் இடம் பெற்றுள்ள எம்.பி.,க்கள் பலர் பங்கேற்றனர்;
இது சீனாவை கோபப்படுத்தியது. இதையடுத்து திபெத் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி.,க்கள் பலருக்கு சீன துாதரகம் கடிதம் எழுதியுள்ளது.அதில், 'திபெத் பார்லிமென்ட் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்றது கவலையளிக்கிறது. திபெத்திய சக்திகளுக்கு ஆதரவு தர வேண்டாம். திபெத்துக்கு ஆதரவு தெரிவித்தால், இந்தியா - சீனா நட்புறவு பாதிக்கும் அபாயம் உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா துாதரகத்தின் இந்த கடிதத்துக்கு, எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவின் அமைப்பாளர் சுஜீத் குமார் கூறியதாவது:இந்திய எம்.பி., ஒருவருக்கு கடிதம் எழுத சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்திய எம்.பி.,க்களின் செயல்பாடு பற்றி சீனா கேள்வி கேட்கவும் முடியாது; தலையிடவும் முடியாது.
சீன துாதரகத்தின் கடிதம் கடும் கண்டனத்துக்குரியது. திபெத் நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்றது பற்றி நம் வெளியுறவு அமைச்சகத்திடம் தான், சீன துாதரகம் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். எம்.பி.,க் களுக்கு கடிதம் எழுதியது பெரும் தவறு. மேலும் இந்திய அரசு சார்பிலோ, வெளியுறவு அமைச்சகம் சார்பிலோ திபெத் நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்கவில்லை. திபெத்துக்கான இந்தியாவின் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு சார்பில் தான் பங்கேற்றோம்.
இந்தியா - திபெத் இடையேயான கலாசார, வர்த்தக உறவை மேம்படுத்துவதுதான் எங்களின் நோக்கம். திபெத் கலாசாரம், கலை உள்ளிட்டவற்றை பாதுகாப்பது தான் எங்களின் நோக்கம். இதில் அரசியல் என்ற பேச்சுக்கு சிறிதும் இடம் இல்லை. திபெத் - இந்திய மக்கள் உறவை மேம்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். இந்தக் குழுவின் அமைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். அப்போது இந்த குழு சிறப்பாக செயல்பட்டது.
அதன்பின் குழுவின் நடவடிக்கைகள் முடங்கின. சமீபத்தில் இக்குழுவுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவுக்கு சென்று தலாய் லாமாவை சந்திக்க முடிவு செய்துஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கடிதம்
திபெத் பார்லிமென்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி., மனீஷ் திவாரி கூறியதாவது: சீன துாதரகத்திடமிருந்து எனக்கு கடிதம் வரவில்லை. அப்படியே வந்தாலும் பதில் அளிக்க மாட்டேன். சீன வெளியுறவு அமைச்சர் கடிதம் எழுதினால் பதில் அளிப்பேன். இந்திய எம்.பி.,க்களை விமர்சிக்க சீனாவுக்கு தகுதியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
உண்மையை மறைக்க முடியாதுவெளியுறவுத் துறை பதிலடி
அருணாச்சல பிரதேசத்தை சீனா எப்போதும் ஜாங்னான் என குறிப்பிட்டு வருகிறது. இந் நிலையில் அருணாச்சலில் உள்ள 15 இடங்களுக்கான பெயர்களை சீனா மாற்றி உள்ளது. இதில் எட்டு நகரங்கள், நான்கு மலைகள், இரண்டு ஆறுகள், ஒரு கணவாய் ஆகியவை அடங்கும்.
இது தொடர்பாக நம் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: அருணாச்சல பிரதேசத்தின் பெயர்களை மாற்றுவது போன்ற முயற்சிகளில் சீனா ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2017 ஏப்ரலிலும் இதுபோன்று செய்துள்ளது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; இது எதிர்காலத்திலும் தொடரும்.அந்த மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டுவதன் வாயிலாக உண்மையை மாற்றிவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியான் கூறுகையில், ''இந்தியா தனக்கு சொந்தம் என கூறும் அருணாச்சல பிரதேசம், தெற்கு திபெத் என்பதும், அது சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதிலும் மாற்று கருத்துக்கு இடமில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE