பேய் மழை பெய்ய என்ன காரணம்? | Dinamalar

பேய் மழை பெய்ய என்ன காரணம்?

Updated : ஜன 01, 2022 | Added : ஜன 01, 2022 | கருத்துகள் (41) | |
சென்னை : ''வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, நிலப்பகுதி நோக்கி வேகமாக வரும் போது ஏற்பட்ட காற்று குவிதல் காரணமாக, நேற்று முன்தினம் சென்னையில் திடீர் கனமழை பெய்தது,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.அவர் அளித்த பேட்டி: கடலில் 10 கி.மீ., உயரத்தில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இருப்பதை, இரண்டு நாட்களுக்கு முன்பே கணித்தோம். அது, வெள்ளிக் கிழமை தான்
 பேய் மழை,  வானிலை மையம், இயக்குனர்

சென்னை : ''வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, நிலப்பகுதி நோக்கி வேகமாக வரும் போது ஏற்பட்ட காற்று குவிதல் காரணமாக, நேற்று முன்தினம் சென்னையில் திடீர் கனமழை பெய்தது,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: கடலில் 10 கி.மீ., உயரத்தில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இருப்பதை, இரண்டு நாட்களுக்கு முன்பே கணித்தோம். அது, வெள்ளிக் கிழமை தான் கரையை நெருங்கி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம்.


latest tamil news
வானில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் வசதி, நில பகுதியில் மட்டும் தான் உள்ளது. இதனால், அந்தமான் மற்றும் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள சாதனங்கள் வாயிலாகவே, மேலடுக்கு சுழற்சியின் போக்கு கண்காணிக்கப்பட்டது. அந்த சுழற்சி, குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து வரும். இத்தகைய நகர்வு அடிப்படையில், வெள்ளிக்கிழமை தான் மழையை எதிர்பார்த்தோம். ஆனால், சில சமயங்களில் எதிர்பார்த்ததை விட வேகமாக மேக கூட்டம் நகர்ந்து வரும்.


அதி கனமழைமேலடுக்கு சுழற்சி வேகமாக நகர்ந்து வரும் சமயத்தில், 10 கி.மீ., உயரம் வரை காற்று குவிதல் ஏற்பட்டு, மேலடுக்கு சுழற்சியில் இருக்கும் மேகம் அதிகன மழையாக பொழியும். மேலடுக்கு சுழற்சியின் நகர்வை கணிக்கும் போது அது கடலில் தான் இருந்தது. நிலப்பகுதிக்கு முன்கூட்டியே வந்ததை கணிக்க முடியவில்லை. இதனால் தான் எதிர்பாராத வகையில், நேற்று முன்தினம் கன மழை பெய்துள்ளது. இந்த இடத்தில், இவ்வளவு செ.மீ., மழை பெய்யும் என்பதையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. அதனால், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் கனமழை வாய்ப்புள்ளது என்று தெரியவந்தால், பக்கத்து மாவட்டத்துக்கும் சேர்த்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும். அந்த மாவட்டத்தில் கன மழை பெய்யாமல் போகலாம். ஆனால், அதன் அருகில் ஏதாவது ஒரு இடத்தில் மழை பெய்து இருக்கும்.


நடைமுறை என்ன?வானிலை கணிப்புக்காக பயன்படுத்தும் கனிணி வழிமுறை, நேற்று முன்தினம் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதை சொல்லவில்லை. ஆனால், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதை, அந்த வழிமுறை வாயிலாக அறிய முடிந்தது. தற்போது நிலத்தில் உள்ள சாதனங்கள் வாயிலாக மட்டுமே, வானிலை தகவல்களை பெற முடிகிறது, செயற்கைகோள் வாயிலாகவும் தரவுகள் பெறப்படுகின்றன. அதில் மேக கூட்டங்கள் அடிப்படையிலான காற்றின் வேகம், நகர்வு மட்டுமே தெரியவரும். அந்தமான், சென்னை, காரைக்கால் நகரங்களில் மட்டுமே, இதற்கான சாதனங்கள் உள்ளன. காரைக்காலில் உள்ள சாதனத்தில் கூட, இந்த மேலடுக்கு சுழற்சி குறித்த தரவுகள் கிடைக்கவில்லை. மேக கூட்டங்கள் இல்லாத போது, 'ரேடார்' கருவிகளால் மழையை முன்கூட்டியே கணிக்க முடியாது. மேக கூட்டங்கள் உருவான பின்தான் அதன் நகர்வை ரேடார் வாயிலாக அறிகிறோம். இந்த விஷயத்தில் குளிர் காலத்தில், மூன்று கி.மீ., உயரத்தில் மேக கூட்டம் இருந்தாலும் கன மழை பெய்யும். ஆனால், இதற்கு மேல் காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றத்தாலும் திடீர் கன மழை வரும்.


மேக வெடிப்புமேக வெடிப்பு காரணமாக கன மழை கொட்டியதாக எடுத்துக் கொண்டால், அந்த இடத்தில் மேக கூட்டம் திடீரென உருவாகி, மழை கொட்டிய பின் கலைந்து சென்று விடும். தற்போது மேலடுக்கு சுழற்சியில், மேக கூட்டங்கள் தொடர்ந்து இருப்பதால், இதை மேக வெடிப்பு என்று கூற முடியாது. தற்போதைய மேலடுக்கு சுழற்சி, வழக்கத்துக்கு மாறாக ஒரே இடத்தில் நிலைத்து நிற்கிறது. இதனால், அதன் போக்கு குறித்து துல்லியமாக கணிக்க முடியவில்லை. இவ்வாறு புவியரசன் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X