புதுடில்லி:இந்தியாவில் 'டெல்டா' வைரசுக்கு மாற்றாக 'ஒமைக்ரான்' பரவத் துவங்கி உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தென் ஆப்ரிக்காவில கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கி உள்ளது. இதுவரை 1,270 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பாதிப்பு
மஹாராஷ்டிராவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் டில்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. டில்லியில் சமூக அளவில் பரவ துவங்கி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உறுதி
![]()
|
ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.இந்நிலையில் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், 'ஒமைக்ரான் வைரஸ் பரவும் வேகத்தை கணக்கிடுகையில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவ துவங்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தன.
இந்தியாவுக்கு சவால்
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கூறியதாவது:இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து, கடும் சவால்களை இந்தியா எதிர்கொள்ள
வேண்டியிருக்கும். அதற்கு இப்போதே இந்தியா, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டதற்கான அறிகுறி இல்லாமல் இருந்தாலும், மக்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று, விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.