கோவை: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில் குப்பை அள்ளிச் செல்ல, தேவையின்றி, வாடகைக்கு வாகனங்கள் இயக்கி, ரூ.43.24 கோடி இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக, தணிக்கைத்துறை தெரிவித்திருக்கிறது.

கோவை நகர் பகுதியில் உருவாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. தள்ளுவண்டி, தொட்டி, ஆட்டோ, டிப்பர் லாரி, டம்ளர் பிளேசர் உள்ளிட்டவை வாங்கப்படுகின்றன. இவை தவிர, வாடகை வாகனங்களும் ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.
குப்பை மேலாண்மைக்கு மட்டும் பல கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் செலவிடப்படுகிறது.இதில், தினமும் சேகரமாகும் குப்பை அளவீடு செய்வது, கிடங்கு வசதி ஏற்படுத்தியது, தொட்டி வாங்கியது வாகனங்கள் வாடகைக்கு நியமித்தது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தணிக்கைத்துறை ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், பல்வேறு அதிர்ச்சிகரமாக தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
ரூ.43.24 கோடி செலவு
மாநகராட்சிக்கு சொந்தமாக, டம்பர் பிளேசர், காம்பேக்டர், டிப்பர் லாரி, டிராக்டர் என, 200 வாகனங்கள் இருக்கின்றன. டம்பர் பிளேசர் வாகனம் நாளொன்றுக்கு ஆறு டிரிப், மற்ற வாகனங்கள் இரண்டு டிரிப் குப்பை எடுத்துச் செல்கின்றன.
பழுது, பராமரிப்பு, எப்.சி., புதுப்பித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக, இவ்வாகனங்கள், 20 முதல், 45 நாட்கள் இயங்காமல் இருந்ததாக, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வாகனங்கள் எண்ணிக்கை, கொள்ளளவு, டிரிப் கணக்கு உள்ளிட்டவற்றை தணிக்கைத்துறை ஆய்வு செய்தபோது, நாளொன்றுக்கு, 1,044 டன் குப்பை கையாள்வதற்கான வசதி, மாநகராட்சி வசம் இருப்பதாக கணக்கிட்டுள்ளது.

ஆனால், 2016-19 கால கட்டத்தில், 850 முதல், 950 டன் வரையிலான கழிவு சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால், மாநகராட்சி வாகனங்களே கழிவுகளை எடுத்துச் செல்ல போதுமானதாக இருந்திருக்கிறது. இருந்தாலும், 64 முதல், 68 டிப்பர் லாரிகளை வாடகைக்கு எடுத்து, ரூ.43.24 கோடி செலவிட்டிருக்கிறது; இச்செலவை தவிர்த்திருக்கலாம். இதற்கு தமிழக அரசு அளித்துள்ள பதில் ஏற்கக்கூடியதல்ல என, தணிக்கைத்துறை தெரிவித்திருக்கிறது.
ஆய்வு கூட்டத்தில் கேள்வி
இதுதொடர்பாக, கோவையில் நடந்த சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் பதிலளிக்கையில், ''இதற்கு முன், 70 வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்பட்டன. இதை, 44 ஆக குறைத்து விட்டோம். மாநகராட்சிக்குச் சொந்தமாக, 370 வாகனங்கள் வாங்க இருக்கிறோம். படிப்படியாக வாடகை வாகனங்கள் தவிர்க்கப்படும்,'' என, தெரிவித்தார்.

அதற்கு , சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, ''குப்பை மேலாண்மைக்கு செலவிட்ட தொகை தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு தரமான கையுறை, காலுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.
குப்பை அளவீடு தவறு
மக்கள் தொகை அடிப்படையில் குப்பை சேகரமாகும் அளவை துல்லியமாக கணக்கிடவில்லை. திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின் படி, 2019ல், 860 டன் அளவுக்கு மட்டுமே குப்பை உருவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், தணிக்கைக்கு, 1,000 டன் என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, 1,100 டன் என்றும், மாறுப்பட்டு மாநகராட்சி கூறியிருப்பதாக, தணிக்கைத்துறை தெரிவித்திருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE