மதுரை: 'மதுரை நகரில் 1550 ரவுடிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 81 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்' என போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது:
மதுரை நகரில் 1550 ரவுடிகளில் 1204 பேர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். 45 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள். 62 பேர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள். 792 பேரிடம் வழக்கமான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் 569 பேரிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது.

இதன் நிபந்தனைகளை மீறிய 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.2021ல் நடந்த 35 கொலைகள் குடும்ப தகராறு, சிறு சண்டை, தெரிந்த நபர்களுக்குள் பிற தகராறால் நடந்தவை. ஆதாய கொலை நடக்கவில்லை.
கடந்த 2019, 2020ல் முறையே 2,3 ஆதாய கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2020ல் பதிவான 733 வழிப்பறி, திருட்டு வழக்குகளில் ரூ.3.5 கோடி அளவுக்கு சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டது. அதில் 481 வழக்குகளில் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டன. 145 பெரும் குற்ற வழக்குகளில் ரூ.1.6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டது. அதில் 117 வழக்குகளில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

2021ல் திருடு போன 179 டூவீலர்கள், 500 அலைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2021ல் 587 போதைப்பொருள் கஞ்சா விற்பனையாளர்கள் மீது 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.ஒரு கோடி மதிப்புள்ள 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் புகையிலை விற்ற 543 விற்பனையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 6,500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மது விற்ற 2980 பேர் கைது செய்யப்பட்டு ரூ.72 லட்சம் மதிப்புள்ள 5700 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. 81 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் 11,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE