காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை சேர்ந்தவர், பிள்ளைகள் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால், தான் சம்பாதித்த 2 கோடி ரூபாய் வீட்டை, முருகன் கோவிலுக்கு தானமாக கொடுத்தார்.
காஞ்சிபுரம், முனுசாமி அவென்யூ பகுதியில் வசிப்பவர் வேலாயுதம், 85. அவரது மனைவி ஞானமணி.காஞ்சிபுரம் நகராட்சியில், துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், வேலாயுதம். இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன். மூன்று பேரும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்ளை திருமணம் செய்து கொண்டனர். இதனால், தன் குல தெய்வமான குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு தன் சொந்த வீட்டை தானமாக எழுதி கொடுத்துள்ளார்.
இது குறித்து வேலாயுதம் கூறியதாவது:நான் சம்பாதித்து வீட்டை கட்டினேன். ஹிந்து மதத்தை சேர்ந்த எனக்கு, கடைசி காலத்தில் பிள்ளைகள் இறுதி சடங்கு செய்வர் என இருந்தேன். இரு மகள்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும், அரசு பணியில் உள்ளனர். ஒரு மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும் கிறிஸ்துவ மதத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மூன்று பிள்ளைகளும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டனர். எனவே, எனக்கு ஹிந்து முறைப்படி அவர்கள் இறுதி சடங்குகள் செய்யப்போவது இல்லை. எனக்கு சொந்தமான 2,680 ச. அடி பரப்பளவு வீடு, தற்போது 2 கோடி ரூபாய் மதிப்புடையது. இந்த வீட்டை மதம் மாறியஎன் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பவில்லை.ஆகையால், என் குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன்கோவிலுக்கு தானமாக எழுதி வைத்து விட்டேன்.
கிறிஸ்துவர்களாக மாறிய பின் நான் இறந்தாலும், எனக்கு அவர்கள் இறுதி சடங்கு செய்ய மாட்டார்கள். இதனால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு என் சொத்தை கொடுக்க விருப்பம் இல்லை.தற்போது என் மூத்த மகளும், இரண்டாவது மகனும் என் வீட்டில் ஒரு பகுதியில் வசிக்கின்றனர்.
நாங்கள் உயிருடன் இருக்கும் வரை, இந்த வீட்டில் அவர்கள் வசிக்கலாம். எங்கள் மறைவுக்கு பின் இந்த வீட்டை கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்ளும். அதற்கான வீட்டு பத்திரத்தை அறநிலையத்துறை அமைச்சர் முன்னிலையில், நேற்று முன்தினம் கோவிலுக்கு வழங்கி விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE