சென்னை:'அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருவதுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான், நம் எல்லாருடைய எதிர்பார்ப்பு. அப்படி இருக்க வேண்டும் என்றால், கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை மறந்துவிடக் கூடாது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையில் இருந்து, மீண்டும் வந்திருக்கிறோம்.
இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த போது தான், முதல்வராக பொறுப்பேற்றேன். கொரோனாவை கட்டுப்படுத்துவது தான், முதல் வேலையாக இருந்தது. குறைந்த கால அளவிலேயே, இரண்டாம் அலையை கட்டுப்படுத்தினோம். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பும் முக்கியக் காரணம்.
தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கொரோனா பரவலையும், இறப்பு எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடிந்தது. அதே மாதிரியான ஒத்துழைப்பைதான், இந்த புத்தாண்டில் எதிர்பார்க்கிறேன். கொரோனா பல உருமாற்றங்களை அடைந்து, தற்போது 'ஒமைக்ரான்' என்ற பெயரில் பரவும் வேகம் அதிகரித்து இருக்கிறது. அதனால், நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ஒமைக்ரான் பரிசோதனை, சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை, மருந்து அனைத்தும் போதுமான அளவில் இருக்கின்றன.கூடுதல் தேவையை யோசித்து, முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே யாரும் பயப்படத் தேவையில்லை.
உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்கு தேவை.ஒமைக்ரான் பரவலை தடுக்க, சில கட்டுப் பாடுகளை அரசு போட்டிருக்கிறது. அது உங்கள் பாதுகாப்பிற்காகத்தான். அந்த கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்; கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளை தவிருங்கள். இம்மாதம் முதல், 15 - 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு, தடுப்பூசி போடும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம்.
உங்கள் வீட்டில், அந்த வயதில் சிறுவர்கள் இருந்தால், மறக்காமல் தடுப்பூசி ஊசி போடச் செய்யுங்கள்.தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தால், ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டாலும், அதன் தாக்கம் மிகக் குறைவாகத் தான் இருக்கும் என, மருத்துவ வல்லுனர்கள் சொல்கின்றனர். அதனால், இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், உடனே போட்டுக் கொள்ளுங்கள்.தமிழக மக்கள் ஒவ்வொருவருடைய உடல் நலனும், மிகவும் முக்கியம். அதற்காகத் தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE