நம் நாட்டின் தலையெழுத்து!
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும், ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பது நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய என்று நினைத்தால், அது வடிகட்டின முட்டாள்தனம்.'கட்சி' என்ற பெயரில், ஒரு கம்பெனியைத் துவக்கி, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது தான் நோக்கம். அன்று, வர்த்தகம் செய்ய வந்து நாட்டை கைப்பற்றினான், வெள்ளையன் என்ற கம்பெனிக்காரன். இன்று, கட்சி நடத்துகிறோம் என்று நாட்டைக் கொள்ளையடிக்கின்றனர்.இதற்கு தேச அளவில், காங்கிரசும்; மாநில அளவில், தி.மு.க.,வும் உதாரணம்.காங்கிரஸ் என்பது நேரு குடும்பத்தின் பூர்வீக சொத்து என்றால், தி.மு.க., என்பது கருணாநிதியின் பாட்டன் சொத்து.நாட்டில் உள்ள பல கட்சிகள், இன்று வாரிசு அரசியல் நடத்துவதற்கு வித்திட்டது, இந்த இரண்டு கட்சிகள் தான்.
அண்ணாதுரை உருவாக்கிய தி.மு.க.,வை, கருணாநிதி சாமர்த்தியமாக தன் குடும்ப கம்பெனியாக மாற்றினார்.முடிசூடா மன்னர் போல கட்சியை ஆண்ட கருணாநிதி, தனக்குப்பின் தன் மகன் ஸ்டாலினுக்கு தான் பட்டம் சூட்டப்படும் என, கைகாட்டினார்.ஓரளவுக்கு அரசியல் அனுபவம் இருந்தாலும், இன்று முதல்வராக ஸ்டாலின் முடிசூட்டப்பட்டதற்கு, தி.மு.க., கம்பெனி எம்.டி., கருணாநிதியின் மகன் என்பது தான் உண்மையான காரணம்.கம்பெனி கைவிட்டுப் போய் விடக் கூடாது என்பதில், கருணாநிதியின் குடும்பம் ஜாக்கிரதையாக இருப்பதால், பட்டத்திற்கு உரிய அடுத்த வாரிசாக, ஸ்டாலினின் மகன் உதயநிதி உருவாக்கப்படுகிறார்.
இந்த வாரிசு தயார் செய்யப்படுவதை மறைக்க, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு நாடகமே நடத்திக் கொண்டிருக்கிறார்.கம்பெனியில் தனக்கு கீழ் வேலை பார்க்கும், 'அமைச்சர்' என்ற ஊழியர்களை, எல்லா அரசியல் மேடைகளிலும், 'உதயநிதி புராணம்' பாட வைக்கிறார்.கம்பெனியில் உள்ள, 90 வயது பழுத்த அரசியல் ஞானம் உள்ள ஊழியர் முதல் நேற்று சேர்ந்தோர் வரை அனைவரும் அலுக்காமல், சலிக்காமல், உதயநிதி பெருமை பேசுகின்றனர். இந்த கொடுமையை எல்லாம், மக்கள் கண்டு கொள்வதில்லை.திறமை, ஆற்றல், அனுபவம் என எதுவும் இல்லாவிட்டாலும், உதயநிதியை புகழ்ந்து தள்ள வேண்டும் என்பது எஜமானின் கட்டளை. அதைத் தான், 'அமைச்சர்' என்ற போர்வையில் வலம் வரும் கம்பெனி வேலையாட்கள் செவ்வனே செய்து வருகின்றனர்.
'ஹிரண்யாய நமஹ' என்பது போல, இன்று மூலைமுடுக்கில் எல்லாம், 'உதயநிதியே நமஹ' என்று சொல்ல வேண்டும் என்பது, அரச கட்டளை.உதயநிதி, விரைவில் துணை முதல்வராகி விடுவார். தி.மு.க., கம்பெனியை வளர்க்கப் பாடுபடுவார். கம்பெனி வளரும்.சரி, நீங்கள் என்ன கேட்கிறீர்கள்... நாடு உருப்படுமா என்றா? கம்பெனி துவக்குவது அதற்காக அல்ல!தகுதியே இல்லாதோர் எல்லாம் தலைவராவது, நம் நாட்டின் தலையெழுத்து .
அதையும் சொல்லுங்களேன்!
மூ.விக்னேஷ், குமரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வழக்கு என நீதிமன்றத்திற்கு வந்து விட்டால், நீதிபதி விசாரித்து வழங்கும் தீர்ப்பை முழு திருப்தியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த தீர்ப்பில் வாதி அல்லது பிரதிவாதி இருவரில் யாருக்காவது உடன்பாடு இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும்
சட்டம் அனுமதி அளிக்கிறது.அதை விடுத்து, தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் ஜாதியையும், அவரது பழக்க வழக்கங்களையும் விமர்சித்து வெகுண்டெழக் கூடாது.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான வழக்குகளில், அவருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தால், அது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும்; எதிராக தீர்ப்பு கிடைத்தால், பணம் கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு என்றும் கூறுவது வழக்கம்.கருணாநிதி உபயோகித்த, 'ஆயுதத்தை' கையில் எடுத்துள்ளார், வி.சி., பிரமுகர் வன்னியரசு.
உண்மையில், விமர்சகர் மாரிதாஸ் மீது, தமிழக அரசு தொடுத்து இருக்கும் வழக்கிற்கும், வன்னியரசுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, விஷத்தை கக்கியுள்ளார்.அதாவது, 'நீதிபதிகளை, தமக்கானோராக மாற்றுவது அல்லது பணிய வைப்பது பா.ஜ.,வின் யுக்தி. ஜனநாயகத்தின் மேன்மையான நீதிமன்றங்கள், சுவாமிநாதன் போன்றோரின் தீர்ப்புக்களால், நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது' எனக் கூறியிருக்கிறார்.நீதிபதிகளை தமக்கானோராக மாற்றி இருந்தால் அல்லது பணிய வைத்திருந்தால், காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் அனைவரையும், மத்திய பா.ஜ., அரசு எப்போதோ டில்லி திஹார் ஜெயிலுக்கு அனுப்பி வைத்திருக்கும்.வன்னியரசு, 'கருத்து சுதந்திரம்' என்ற பெயரில் இப்படி பேசி இருக்க முடியாது.எதையும் சொல்வதற்கு முன், ஒரு முறைக்கு ஒன்பது முறை யோசித்து கருத்து சொல்ல வேண்டும்.வன்னியரசு, 'பாபர் மசூதி நிலம் தொடர்பான தீர்ப்புக்கு முன், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு என்ன நடந்தது?' என்றும்
வினவியுள்ளார். அதை சொல்லுங்களேன், மக்கள் தெரிந்து கொள்ளட்டும்! நீதிபதிகளை விமர்சிப்பது அதிகரித்து வருகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
லஞ்சம் கொடுப்பதும் குற்றம் தான்!
ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருவது, பாராட்டுக்குரியது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள அமைச்சரிடம் இருந்து கைப்பற்றப்படும் அசையும், அசையா சொத்து அனைத்தையும், அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
இவர்கள் அமைச்சர்களாக இருந்த போது, லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் அரசுப் பணியில் சேர முயற்சித்தோர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பது நியாயமற்றது.
இந்திய குற்றவியல் சட்டத்தின்படி லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் குற்றம் தான்.லஞ்சம் கொடுப்பவர் ஒன்றும் பரிசுத்தவான் அல்ல. லஞ்சப் பரிவர்த்தனையின் எல்லா நிலையிலும், அதை கொடுப்பவருக்கும் சம பங்கு உண்டு.
எனவே, லஞ்சம் கொடுப்பவர் மீதும் நடவடிக்கை எடுத்து, அதையும் ஊடகங்கள் வழியே வெளிச்சமிட்டு காட்ட வேண்டும்.வெளிநாடுகளில் லஞ்சம் வாங்குவோருக்கும், கொடுப்பவருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. அதை, நம் நாட்டில் பின்பற்றினால் தான் லஞ்சத்தை வேரறுக்க முடியும்.
கரம்வீர் சர்மாவுக்கு 'சல்யூட்!'
ரா.சேது, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக கலெக்டரின் பணி என்பது மக்களிடம் மனுக்கள் வாங்குவது, அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, அவற்றை ஆய்வு செய்வது என்று தான் இருக்கும்.
ஆனால் மத்திய பிரதேசம், ஜபல்பூர் கலெக்டர் கரம்வீர் சர்மா, இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக திகழ்கிறார்.ம.பி., அரசின் முதல்வர் சிறப்பு பிரிவில் பொதுமக்கள் புகார் அளித்தால், உரிய காலத்திற்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கறார் காட்டுகிறார்.புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, மாதா மாதம் ஆய்வு செய்வதுடன், உரிய காலத்திற்குள் தீர்வு காணாத அதிகாரிகளுக்கு, சில அதிரடியான உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.
ஆய்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்புகிறார்.புகார் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு, சம்பளம் நிறுத்தமும்; தொடர்ந்து மோசமாக செயல்படும் அதிகாரிகளுக்கு, ஆண்டு சம்பள உயர்வையும் நிறுத்தி வைக்க பரிந்துரை செய்கிறார்.
இதற்கெல்லாம் மேலாக, அதிகாரிகள் சரியாக செயல்படாததற்கு தார்மீக பொறுப்பேற்று, தன் டிசம்பர் மாத சம்பளத்தையும் நிறுத்தி வைக்கும்படியும், இந்த நடவடிக்கை அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்றும், மாவட்ட கருவூலத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு அதிகாரிகள் என்றாலே வேலையில் மெத்தனம், அலட்சியம், லஞ்சம், ஊழல், அரசியல்வாதிகளின் கைப்பாவை என்றொரு பிம்பம் உள்ளது.
அவற்றை உடைத்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது மட்டுமின்றி, தன் சம்பளத்தையும், 'கட்' செய்யச் சொல்லி, தனக்குத் தானே தண்டனையளித்த ஒரே அரசு அதிகாரி, கரம்வீர் சர்மா மட்டுமே!
அனைத்து மாநில முதல்வர்களும், கலெக்டர்களும், கரம்வீர் சர்மாவைப் போல வேலை செய்யாத அதிகாரிகள் மீது சாட்டையை சுழற்றினால் தான், நாடு உருப்படும்.
விளையும் பயிரை கண்காணிப்போம்!
-மரகதம் சிம்மன், சென்னையிலிருந்து அனுப் பிய, 'இ-மெயில்' கடிதம்: 'கொரோனா' தொற்றுநோயிலிருந்து மாணவர்களைக் காக்க, 'ஆன்லைன்' வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போது அதுவே, நம் பிள்ளைகளுக்கு ஆபத்தாக முடியும் போல் இருக்கிறது.
கொரோனாவுக்கு முன், பள்ளி மாணவரிடம் மொபைல் போன் கிடையாது. கொரோனாவுக்கு பின், ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர் மொபைல் போன், கணினி ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தனர்.இப்போது, ஏழாம் வகுப்பு மாணவர்கள் கூட, 'வாட்ஸ் அப், பேஸ் புக், யூ டுயூப்' என்று சமூகவலைதளத்தில் நேரத்தை செலவழிக்கின்றனர்.
மாணவர்கள், ஆன்லைனில் படிப்பது கால்வாசி நேரம் தான்; முக்கால்வாசி நேரம், ஆன்லைன் விளையாட்டில் பொழுதை வீணாக்குகின்றனர்.ஆன்லைன் விளையாட்டு, ஒரு போதை பொருள் மாதிரி. தொடர்ந்து, விளையாட துாண்டும். அதற்கு ஒரு முடிவே இல்லை.அந்த விளையாட்டு, ஒருவிதமான தற்காலிக மகிழ்ச்சியை தருகிறது. இதனால், எவ்வளவு நேரம் வீணாகிறது என்று, அவர்கள் அறிவதில்லை.
'ஒர்க் பிரம் ஹோம்' செய்யும் பெற்றோரும், வெளியே சென்று வேலை செய்வோரும், பிள்ளைகளை கண்டுகொள்வதில்லை.மொபைல் போனிலிருந்து வரும் நீல ஒளி, துாக்கத்திற்கு தேவையான, 'ஹார்மோனை' கட்டுப்படுத்துகிறது.
அதனால் அவர்கள் இரவில் சரியாக துாங்குவதில்லை; பகலில் நீண்ட நேரம் கழித்து எழுகின்றனர்.மாணவர்கள், ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதால், பள்ளிக்கு செல்ல மறுக்கின்றனர்; நிறைய பொய் சொல்கின்றனர்; பெரியோரை, மரியாதை குறைவாக பேசுகின்றனர்.
ஆன்லைனில் விளையாடுவதற்காக, 'பசி இல்லை, சாப்பாடு சரியாக இல்லை' என்கின்றனர். பெற்றோர் மிக கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. பிள்ளைகள் உடனிருந்து அவர்களின்
நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும். விளையும் பயிரை முளையிலே கவனிக்க வேண்டும்.'காலம் கெட்டுப்போச்சு, உலகம் மாறி விட்டது' என்று சமூகத்தை குறை கூறாமல், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படிப்பு, மனநிலை, ஆரோக்கியம்
ஆகியவற்றில் அக்கறை செலுத்த வேண்டும்.ஆன்லைன் அடிமைத்தனத்தில் இருந்து நம் பிள்ளைகளை மீட்க வேண்டும்.
ஏன் ஓடி ஒளியணும்?
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தமுன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியிருக்கிறார்.
அவருக்கெதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் குற்றவாளி, வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் தடுப்பது தான், இந்த லுக் அவுட் நோட்டீஸ்.
கடந்த ஆட்சியில் அமைச்சராக அதிகாரத்தோடு வலம் வந்தவர், தவறு செய்யவில்லை என்றால், சட்டத்தைப் பார்த்து ஏன் ஓடி ஒளிய வேண்டும்?கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, இரு திராவிட கட்சிகளும் மாறி, மாறி ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.அரசியல் நாகரிகத்தை மறந்து, இரண்டாம் கட்டத்தலைவர்கள் பேசியதை எல்லாம் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. இதில், ராஜேந்திர பாலாஜியும் விதிவிலக்கல்ல.
ஆனால், தி.மு.க.,வில் தான் அதிகமான பேச்சாளர்கள், இதுபோன்ற தரமற்ற முறையில் பரப்புரையில் ஈடுபட்டனர்.இரண்டு கட்சித்தலைமையும், தரமில்லாத பேச்சாளர்களைக் கண்டிக்கத் தவறியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காமராஜர் போன்ற உன்னதமான தலைவர்களைக் கண்ட இந்த நாட்டில், 'கருத்து சுதந்திரம்' என்ற பெயரில், மூத்த அரசியல்வாதிகளே தரமில்லாத வார்த்தைகளை வாரிக்கொட்டுவது, மிகப்பெரிய சாபக்கேடு.
பதவியில் இருந்த போது ஆணவத்தோடு பேசியது தான், இன்று ராஜேந்திர பாலாஜிக்கு ஏற்பட்டிருக்கும் கதிக்கு காரணம்.ஒருவேளை ஆட்சி மாறியவுடன் செந்தில் பாலாஜியைப்போல, இந்த ராஜேந்திர பாலாஜியும் தி.மு.க.,வுக்கு தாவியிருந்தால், இவ்வளவு துயரத்தை அனுபவிக்க வேண்டிய நிலை வந்திருக்காதோ என்னவோ?
தான் செய்த மோசடிக்கு மட்டுமல்ல, தரமில்லாத பேச்சுக்கும் உரிய பலன் அவருக்குக் கிடைத்தே தீரும். 'உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்கணும்' என்று, சும்மாவா சொன்னார்கள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE