பழங்குடியினரை அரசு புறக்கணிக்கிறதா?
''அவரு அதிகாரியா... இல்லை, அமைச்சரா பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''சேலம் ஆளும்கட்சியின், 'மாஜி' எம்.எல்.ஏ.,வின் கணவர், கோவையில, 'டாஸ்மாக்' நிர்வாகத்துல முக்கிய அதிகாரியாக இருக்குறார் பா...
''அவரின் மனைவி அதிகாரத்துல இருந்தபோது, சாதாரண ஆர்.ஐ.,யாக இருந்தவர், இப்போ, 'டக்'குன்னு பதவி உயர்வு ஆகி, மாவட்டப் பொறுப்புக்கு வந்துட்டார் பா...
''கோவையில, 'பார்' ஏலத்துல, ஆளும்கட்சி தலைமை சொன்னவங்களை தவிர, வேறு யாரையும் டெண்டர் போடவே விடாமல் தடுக்குறாராம் பா...
''ஆளும்கட்சிக்கு இவ்வளவு மாமூல் கொடுக்கணும்... எனக்கு இவ்வளவு கொடுக்கணும்ன்னு கறாரா சொல்லிடுறாராம்... அவர் நடத்துற வசூல் வேட்டையை பார்த்து, டாஸ்மாக் கடை ஊழியர்கள் தெறித்து ஓடுறாங்க பா...
''அமைச்சரை விட, படு பயங்கரமா வசூல் பண்ணுறாரேன்னு எல்லாரும் மிரள்றாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.அப்போது மொபைல் போன் ஒலிக்கவும், ''ஹலோ பாபு... எப்படியிருக்கீங்க...'' என நலம் விசாரித்தார்,
அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள், ஆவணங்கள்ல நுாதன சிக்கலை ஏற்படுத்தி, 'லகரங்களை' சுருட்டுதாவ வே...'' என அடுத்த தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''நில விற்பனையில ஈடுபடுவோரின் ஆவணங்களை எடுத்து, அதுல மேலும் ஓரிருவர் பெயரை சேர்த்து, 'கூட்டு பட்டா' என்ற குளறுபடியை ஏற்படுத்துதாவ வே...
''அதனால் சம்பந்தப்பட்டவங்க, நிலத்தை விற்க முடியாத நிலை உருவாகுது... இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம், கூட்டு பட்டா குளறுபடியை நீக்க மனு கொடுக்காவ...
''அப்போது அதிகாரிகள், அதை சாதகமாக்கி, பல லட்சம் ரூபாய்களை கறந்துடுதாவ... இதுக்கு தாலுகாவின் உயர் பொறுப்புல அதிகாரிகளும், 'பச்சைக்கொடி' காட்டிருக்காவ...
''இது சம்பந்தமாக முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் அனுப்பியிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''அங்கும் போய் பார்த்துருக்காங்க...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.
''என்னன்னு புரியற மாதிரி சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''பழங்குடியினர் நிலை குறித்து ஆய்வு செய்யுறதுக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி, இரண்டு நாட்கள் ஊட்டியில தங்கி இருந்தாருங்க...
''பக்கத்துல இருக்குற தோடர் பழங்குடி கிராமங்களுக்கு போய் ஆய்வு செஞ்சாங்க... முதுமலை வனத்துல வாகன சவாரி செஞ்சு, முகாம் யானைகளையும் பார்வையிட்டாருங்க...
''ஆனால், மாவட்டத்துல பொருளாதார அடிப்படையில மிகவும் பின் தங்கியிருக்குற, 'பனியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர்' ஆகிய பழங்குடியினர் வசிக்குற கூடலுார், பந்தலுார் பகுதியில, அவர் எட்டி கூட
பார்க்கலைங்க...
''அதே போல, சட்டசபை பொது கணக்கு குழுவும், கூடலுாரில் மிகவும் அவதிப்படும் பழங்குடியின மக்களின் கிராமங்களை பார்வையிடலைங்க...
''பழங்குடியின மக்கள், 'அரசு எங்களை புறக்கணிக்குது'ன்னு வருத்தப்படுறாங்க...'' என விளக்கினார், அந்தோணிசாமி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
***************
இதுக்காக தானா கலெக்டரை மாத்தினாங்க?
நண்பர்களுக்கு இஞ்சி டீ கொடுத்து வரவேற்றார், நாயர்.
''இந்த போலீஸ்காரங்களுக்கு என்ன தான் ஆச்சுங்க...'' என்றபடியே டீயை உறிஞ்சினார், அந்தோணிசாமி.
''ஏன்... என்னவிஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''பொள்ளாச்சியில இருக்குற நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்துல தான், அனைத்து விளையாட்டு வீரர்களும் பயிற்சி எடுக்குறாங்க... அதை விட்டாலும், நல்ல மைதானம் ஏதுவுமே இல்லைங்க...
''சில வாரத்துக்கு முன், போலீசார், இந்த மைதானத்துக்கு வந்து, 'இங்கே கஞ்சா புழக்கம் இருக்கு, சரக்கு அடிக்கிறாங்க... ஏதாவது பிரச்னை வந்தால், உங்களை தான் விசாரிப்போம்'ன்னு விளையாட்டு வீரர்களை
மிரட்டியிருக்காங்க...
''பொள்ளாச்சியில கஞ்சா புழக்கம் அதிகமாகி இருக்கு... அவங்களை கைது செய்யாமல், விளையாட வரும் வீரர்களை தடுக்கறாங்க... இந்த போலீசாருக்கு என்ன தான் ஆச்சுன்னு, மக்கள் புலம்புறாங்க...'' என விளக்கினார்,
அந்தோணிசாமி.
''அமைச்சர் மீது விவசாயிகள் கோபமாக இருக்காவ வே...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''மேலே சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, டிசம்பர் 25ம் தேதி முடிவு செஞ்சு, அரசுக்கு கருத்துரு அனுப்புனாவ வே...
''ஆனால் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், '25ம் தேதி நேரம் இல்லை... 26ம் தேதி சாயங்காலம் தண்ணீர் திறப்பு வைச்சுக்கலாம்'ன்னு சொல்லிட்டாராம் வே...
''அதனால அதிகாரிகளும் வேற வழியில்லாமல், 26ம் தேதி சாயங்காலம்தண்ணீர் திறந்துருக்காவ... இது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு வே...
''நல்ல நாள் பார்த்து, சூரியன் உதிக்குற நேரத்தில் தண்ணீர் திறக்கணுமுன்னு, அதிகாரிககிட்ட சொன்னோம்... ஆனால் அமைச்சர் சொன்னாருன்னு, சூரியன் அஸ்தமன நேரத்துல தண்ணீர் திறந்து இருக்காவ வே...
''இதனால விளைச்சல் எப்படி இருக்குமுன்னு தெரியலன்னு விவசாயிகள் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''இதுக்கு தானா கலெக்டரை மாத்தினா ஓய்...'' எனக் கேட்டு, கடைசி தகவலைத் துவக்கினார் குப்பண்ணா.
''என்ன சொல்ல வர்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி கலெக்டராக இருந்த இன்னசென்ட் திவ்யாவை, சமீபத்துல மாத்திட்டா... அவரை மாத்தினதுக்கு அப்புறம், நீலகிரியில விதிமீறல்கள் அதிகமாகிடுத்து ஓய்...
''அந்த மாவட்டத்துல பொக்லைன் இயந்திர பயன்பாடுக்கு தடை இருக்கு... ஆனால் குன்னுார், கேத்தி, அதிகரட்டி என பல இடங்களிலும், பொக்லைன் பயன்பாடு அதிகரிச்சுடுத்து ஓய்...
''ராத்திரில பொக்லைன் மூலமா, மலையை குடைஞ்சுண்டு இருக்கா... இதுக்கு ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலர் உடந்தையாக இருக்கா... எதையுமே கண்டுக்காம, மாவட்ட தலைமை இருக்கு ஓய்...
''விதிமீறல் கட்டடங்கள் மேலையும் இனி மேல் நடவடிக்கை இருக்காதுன்னு பேசிக்கறா...
''இதுக்காக தான், கலெக்டரை மாத்தினாளோன்னு நினைக்கத் தோணறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ஆட்சி முடியுறதுக்குள்ள ஊட்டி இருக்குமா பா...'' என அன்வர்பாய் கேட்க, நண்பர்கள், 'தெரியலையே...' என்றபடியே இடத்தை காலி செய்தனர். பெஞ்ச் அமைதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE