சென்னை :தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 33.46 லட்சம் சிறார்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசிக்கான முன்பதிவு, மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் நேற்று துவங்கியது. பள்ளிகளில் முகாம் அமைத்து, மாணவர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.இந்த தடுப்பூசிகள், நாடு முழுதும் ஜனவரி 16 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்றன.
அனுமதி
தமிழகத்தில் இதுவரை 4.97 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3.36 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளன.அதன்படி, 85.83 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 58.08 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுஉள்ளன.இந்நிலையில், 15 முதல் 18 வயது வரையுள்ள சிறார்களுக்கு, 'கோவாக்சின்' தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி வழங்கிஉள்ளது.நாளை முதல் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. மத்திய அரசின் கோவின் இணையதளத்தில், அதற்கான முன்பதிவு நேற்று முதல் துவங்கி உள்ளது.தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுஉள்ளார்.
![]()
|
அதன் விபரம்:
கடந்த 2007ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்கள். சிறார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள, 'cowin' இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மையங்களுக்கு சென்று நேரடியாகவும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவர்கள் அனைவருக்கும் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்ள, 10ம் வகுப்பு தேர்வு பதிவு எண், ஆதார் எண், பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து, தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களும், 3ம் தேதி முதல் 8ம் தேதிக்குள், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி போட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
25 லட்சம் மாணவர்கள்
தமிழகத்தில் 33.46 லட்சம் சிறார்களில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே,அனைத்து பள்ளிகளிலும் தனி இடம் ஒதுக்கி, சிறப்பு முகாம்கள் அமைக்க, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளிகளில் ஆசிரியர் ஒருவரை, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். அனைத்து பள்ளி நிர்வாகங்களும், தடுப்பூசி செலுத்த தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரிக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமில்லை. நேரடியாகவும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் வைத்து கொள்ள வேண்டும்.பள்ளிகளில் படிக்கும் 25 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டால், மீதமுள்ள சிறார்களை எளிதாக கண்டறிந்து, தடுப்பூசி போட்டு விட முடியும்.பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு, சமூக நலத்துறையுடன் இணைந்து, தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, 33.46 லட்சம் சிறார்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடும் இலக்கை விரைந்து அடைய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று மெகாதடுப்பூசி முகாம்
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தினசரி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல, வாரத்தில் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வந்தது.
கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை, இந்த வாரம் புத்தாண்டு சனிக்கிழமைகளில் வந்ததால், அதற்கு பதிலாக, ஞாயிற்றுக் கிழமையான இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்று 50 ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது.
தனி வரிசை அவசியம்
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு:கோவின் இணையதளத்தில், 15 வயதிற்கு மேற்பட்டோர் பதிவு செய்யலாம். நேரடியாகவும் மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். பொது மையங்களில், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த, தனியாக பணியாளர்களைநியமிப்பதுடன், தனி வரிசையும் மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE