புத்தாண்டில் பிரதமர் மோடிக்கு காத்திருக்கிறது சவால்கள்!

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (7)
Advertisement
புத்தாண்டு பிறந்து ஒரு நாள் ஆகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவுக்கு பொருளாதாரம், கொரோனா தொற்று, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் பல சவால்கள் காத்திருக்கின்றன. இந்த சவால்களை முறியடித்து, புதிய இந்தியாவை அடையும் கனவு நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் மோடி பேசும்போது, 'நாம் ஒவ்வொருவரும் புதிய
புத்தாண்டு, பிரதமர் மோடி, சவால்கள்!

புத்தாண்டு பிறந்து ஒரு நாள் ஆகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவுக்கு பொருளாதாரம், கொரோனா தொற்று, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் பல சவால்கள் காத்திருக்கின்றன. இந்த சவால்களை முறியடித்து, புதிய இந்தியாவை அடையும் கனவு நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் மோடி பேசும்போது, 'நாம் ஒவ்வொருவரும் புதிய உறுதியுடன், புதிய சக்தியுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, 75வது சுதந்திர தினத்தில் பாதுகாப்பான, செழிப்பான, வலிமையான தேசத்தை உருவாக்குவோம்' என்றார்.
இந்த அழைப்பு ஏராளமான சவால்களுக்கு வித்திட்டுள்ளது; அவை இந்தாண்டும் தொடரும்.


latest tamil news

மூன்றாவது அலைகடந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு மிகச் சவாலானதாக இருந்தது. கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது.இதை சமாளிக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பிற நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசி வழங்கியது. இந்நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலை, 'ஒமைக்ரான்' வைரஸ் வழியாக உலகை தாக்கத் துவங்கியுள்ளது.

இது, மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, போதிய அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பில் வைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து, இரண்டாவது அலையின் பாதிப்பு போல மீண்டும் நிகழாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அரசும் தயாராகி விட்டது. சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு, 'பூஸ்டர் டோஸ்' போடும் பணி துவங்கியுள்ளது.
நாளை முதல், 15 - 18 வயதுள்ளோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் அமலுக்கு வர உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. மக்கள் தொகையில் உடல் தகுதியுள்ள 62 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


அரசியல் மேடைவிரைவில் உ.பி., உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. உ.பி.,யில் பா.ஜ., பெறும் வெற்றி, 2024ல் பிரதமர் பதவியில் மோடியை மூன்றாவது முறை அமர வைக்க உதவும்.
அதனால், வாரணாசி எம்.பி.,யான மோடி கடந்த இரு மாதங்களில் 12 முறை உ.பி.,யில் சுற்றுப் பயணம் செய்துள்ளார். அதுபோல் உத்தரகண்ட் மற்றும் இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் நடக்க உள்ள தேர்தல்களிலும் பா.ஜ., வென்று ஆட்சியை தக்க வைத்தால், அதிருப்தி முதல்வர்களை நீக்கிய மோடியின் முடிவு சரியே என்பது நிரூபணமாகும்.
பா.ஜ., முதல்வர்கள் மாற்றப்படாத கோவா, மணிப்பூர், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களும் இந்தாண்டு நடக்க உள்ளன. கோவாவில் ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் ஆகியவை பா.ஜ.,வுக்கு கடும் போட்டியாக விளங்கும். ஆனால், 'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை தன் வெற்றிக்கு கைகொடுக்கும்' என பா.ஜ., கருதுகிறது.


பொருளாதாரம்நம் நாட்டின் மக்கள் தொகை 134 கோடியாக உள்ளது. ஆண்டுக்கு 1 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்து, இந்தாண்டு 140 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. நிலம், நீர், தாதுப் பொருட்கள், எரிசக்தி ஆகிய வளங்கள் வரையறுக்கப்பட்ட அளவிற்கு உள்ள சூழலில், மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப பண்ணை மற்றும் தொழில் துறை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது, மோடி அரசுக்கு சவாலாகவே இருக்கும்.


கட்டமைப்பு இடர்ப்பாடுகள்புதிய இந்தியாவை உருவாக்க தரமான சமூகம் மற்றும் பொருளாதார கட்டமைப்பு அவசியம். உலகளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் 2015 - 16ம் ஆண்டில் 81வது இடத்தில் இருந்த இந்தியா, 2016 - 17ம் ஆண்டில் 68வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
எனினும் இந்த முன்னேற்றம், அதிகரித்து வரும் மக்கள் தொகையை ஒப்பிடும்போது போதுமானதல்ல எனலாம். இந்தியாவில் சுலபமாக தொழில் புரிவதற்கான தடைக் கற்களில் ஒன்றாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை உள்ளதாக உலக பொருளாதார கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.


திண்டாட்டம்சில ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 2020ல் நகர்ப்புறங்களில் 9.1 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருந்தனர். இது, 2021ம் ஆண்டில் 9.3 சதவீதமாக
உயர்ந்துள்ளது.மத்திய அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்க, 'திறன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம்' போன்ற பல திட்டங்களையும், தொழிலாளர் சீர்திருத்தங்களையும் செய்துள்ளது. இருந்தபோதிலும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.


சுகாதாரம் - கல்விகடந்த 2019 புள்ளி விபரப்படி சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 188 நாடுகளின் பட்டியலில், இந்தியா 131வது இடத்தை பிடித்து உள்ளது.
சிறந்த கல்வி, மேம்படுத்தப்பட்ட ஆரோக்கிய பராமரிப்பு ஆகியவற்றின் வாயிலாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.


பாதுகாப்புஉள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்தியா பாதுகாப்பு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சீனா, பாக்., உடன் எல்லை தகராறு, எல்லை தாண்டிய பயங்கரவாதம், வட கிழக்கில் தலைதுாக்கும் பிரிவினைவாதம் ஆகியவை தேச பாதுகாப்புக்கு சவாலாக உள்ளன.
லடாக் பிரச்னை, தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கப் போக்கு, சீனா - பாக்., பொருளாதார வழித்தட திட்டம் ஆகியவை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ராணுவத்திற்கு முக்கிய சவாலாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


'சைபர்' குற்றங்கள்நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் 'டிஜிட்டல்' மயமாகி வருவதற்கு ஏற்ப 'சைபர்' குற்றங்களும், பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. அதனால், வரும் ஆண்டு களில் நிதி பரிவர்த்தனைகளின் பாதுகாப்புக்கு கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டி இருக்கும்.


பருவநிலை மாற்றம்இந்திய நிலப்பரப்பில் 58.6 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி, மிதமானது முதல் தீவிரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக் கூடியவை.வெள்ளம் மற்றும் ஆற்றின் கரை அரிப்பில் சேதம் அடைய, 12 சதவீத நிலப்பரப்பிற்கு வாய்ப்புள்ளது. 7,516 கி.மீ., நீள கடலோர பகுதியில் 5,700 கி.மீ., துாரம் சுனாமி, புயல் போன்றவற்றால் பாதிக்கும் அபாயம் உள்ளது. மொத்த பயிர் பரப்பில் 68 சதவீதம் வறட்சியால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.


நிர்வாக பிரச்னைகள்மக்களால் இயக்கப்படும் அரசு நிர்வாகம் தான் புதிய இந்தியாவை உருவாக்கும். இதை அடைய லஞ்ச ஊழல், அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம், 'சிவப்பு நாடா' முறை போன்ற பிரச்னைகளை தீவிரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் லஞ்ச ஊழல் குறைந்துள்ளது. இருந்தாலும் துாய்மையான 180 நாடுகளில், இந்தியா 86வது இடத்தில் உள்ளதாக டி.ஐ.சி.பி., குறியீடு தெரிவிக்கிறது.நிர்வாகத்தில் நடக்கும் ஊழல், சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்; இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய தடைக்கல்லாக இருக்கும். அதனால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது முக்கியம்.


சமூக நலன்நாட்டில் சமீப காலமாக வகுப்புவாத வன்முறை தலைதுாக்கி வருவதாக, அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்பான, செழுமையான புதிய இந்தியாவை உருவாக்க ஜாதி, மதம், இனம் சார்ந்த வன்முறைகள், பாரபட்ச அணுகுமுறைகள் உள்ளிட்ட சமூகத் தீங்குகளை, இந்திய சமுதாயத்தில் இருந்து அகற்ற வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள், புதிய இந்தியா என்ற பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜன-202208:26:35 IST Report Abuse
அப்புசாமி பி.வி நரசிம்மராவ் காலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஒரு வார்த்தை கூட பேசாம உருவாக்கினாங்க. சுய தம்பட்டம் இல்லாத சாதனை. இப்போ என்னடான்னா, வளர்ச்சி, வளர்ச்சின்னு வாய்ச்சவடால் கும்மிக்கிட்டிருக்காங்க. தங்கள் தோல்விகள் எல்லாத்துக்கும் நேரு, பாபர், அக்பர், அவுரங்கசீப் காரணம்னு பேசிக்கிட்டிருக்காங்க. இஷ்டம் போல சிறப்புக் கட்டணம், பெட்ரோல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி உயர்வுன்னு மக்களிடம் உருவிக்கிட்டிருக்காங்க. வேலையில்லாதவர் எண்ணிக்கை உயர்ந்த போதும், ....களுக்கு வேலை நீட்டிப்பு குடுத்து சாதனை. உ.பி எலக்ஷனில் ஆப்பு கிடைத்தால் ஒழிய திருந்த மாட்டாங்க.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
02-ஜன-202205:37:59 IST Report Abuse
spr "இந்தியாவில் லஞ்ச ஊழல் குறைந்துள்ளது. இருந்தாலும் துாய்மையான 180 நாடுகளில், இந்தியா 86வது இடத்தில் உள்ளதாக டி.ஐ.சி.பி., குறியீடு தெரிவிக்கிறது" இது ஒன்றுக்காகவே மோடி ஆட்சி தொடரட்டும் ஆனால், நாட்டின் வேலையில்லாமல் ஊரைச் சுற்றும் இளைய தலைமுறையாலேயே பல பிரச்சினைகள் வருவதால் மதிப்புடன் வருமான தருகின்ற அவரவர் படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பு மிக அவசியம் மற்றபடி இதர பிரச்சினைகளை சலுகை மானியம் மொழி மதம் என ஏதாவதொன்றினால் மக்களை ஒருவருக்கொருவர் நிறுத்தி சமாளிக்கலாம் எதிர்க்கட்சிகள் அதற்கு பெரிதும் உதவி செய்யும் ஆனால் இயற்கை சீற்றத்தைத்தான் என்ன செய்வதெனத் தெரியவில்லை
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜன-202200:28:45 IST Report Abuse
முக்கண் மைந்தன் //இந்தியா பாதுகாப்பு பிரச்னைகள்// சனங்க அவுங்களாவே சமாளிச்சி, அவுங்களாவே தீத்துக்க வேண்டிதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X