புதுடில்லி: தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா குருநாத் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் டில்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது.

ஆனால் 'இப்படி நடக்கப் போகிறது என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்' என்கின்றனர், இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள்.இந்த ராஜினாமாவிற்கு ஓரிரு நாட்களுக்கு முன் மூன்று அரசியல்வாதிகளின் வாரிசுகள் மொபைல் போனில் 'கான்பரன்ஸ்' அழைப்பு வாயிலாக பேசிஉள்ளனர்.உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் புதல்வர் ரோஹன் ஜெட்லி டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக பணியாற்றுகிறார்.இந்த இருவரோடு தமிழக முதல்வரின் மகன் உதயநிதி பேசியுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூன்று அரசியல் வாரிசுகள் 'கான்பரன்ஸ்' அழைப்பு வாயிலாக பேசும் போது, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலியும் இணைந்துள்ளார்.தமிழக கிரிக்கெட் வாரிய தலைவராக உதயநிதி நியமிக்கப்படுவார் என செய்திகள் அடிபடும் நிலையில், இவர்கள் அனைவரும் போனில் பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
'பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வந்த தி.மு.க., இப்போது அடக்கி வாசிப்பதன் காரணமும் இந்த வாரிசுகளின் அரசியல் தானோ' என, கேள்வி எழுப்புகின்றனர், டில்லி அரசியல்வாதிகள். இந்த மூன்று அரசியல் வாரிசுகள் போனில் பேசி முடித்ததும், 'உதயநிதி அருமையாக ஆங்கிலம் பேசுகிறார்' எனக் கூறியுள்ளார் ஒரு வாரிசு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE