புதுடில்லி: தி.மு.க., - எம்.பி.,க்கள் டில்லியில் யாரைச் சந்தித்தாலும், மறுநாளே தமிழக தினசரிகளில் புகைப்படம் வெளியாகும். ஆனால் சமீபத்தில் 'நீட்' தேர்வு தொடர்பாக, டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இந்த எம்.பி.,க்கள் மனு அளித்தனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகவில்லை. காரணம் இவர்கள் மனுவை ஜனாதிபதி மாளிகை வரவேற்பறையில் கொடுத்துவிட்டு வந்து விட்டனர். ஜனாதிபதியைச் சந்திக்கவில்லை.

தி.மு.க., - எம்.பி.,க்கள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. தி.மு.க., - எம்.பி.,க்கள் கொடுத்த மனு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு உள்ள நீட் மசோதா தொடர்பானது. இந்த விவகாரம் இப்போது தமிழக கவர்னரிடம் நிலுவையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி எதுவும் செய்ய முடியாது என்பதால், தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. தமிழக கவர்னர் தன் ஒப்புதலை அளித்து, பின் ஜனாதிபதிக்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்.

இதற்கிடையே தமிழக கவர்னர் பரிசீலனையில் இந்த விவகாரம் உள்ளதாக செய்திகள் வெளியாயின. பிரதமர், கவர்னர் உட்பட முக்கிய பதவியில் உள்ளவர்களுக்கு மனு அனுப்பினால், 'உங்கள் விஷயம் எங்கள் பரிசீலனையில் உள்ளது' என, பதில் அளிப்பது வழக்கம்; அப்படித்தான் கவர்னர் அலுவலகத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பரிசீலனையை வைத்து எந்த முடிவுக்கும் வரக் கூடாது, என்கின்றன டில்லி வட்டாரங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE