சென்னை: கடந்த சில மாதங்களாக எப்போது பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்தாலும், ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பி சபையை முடக்கி வருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகி விட்டது. இந்த முறையும் தி.மு.க., உட்பட எதிர்க்கட்சிகள் முழுமையாக சபையை முடக்கின.எதிர்க்கட்சியினர் என்ன செய்தனரோ, அதை தமிழகத்திலும் செய்ய, பா.ஜ., முடிவெடுத்து விட்டது.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் பேசியுள்ளார். தமிழக சட்டசபை விதிகள் குறித்து நன்கு ஆய்வு செய்யும்படி கூறியுள்ளார். எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி அமளியில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபையிலும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் இதே முறையை பின்பற்ற வேண்டும் என அண்ணாமலைக்கு, நட்டா ஆலோசனை வழங்கியுள்ளாராம்.

'பெட்ரோல், டீசல் விலையை குறை, வெள்ள நிவாரணத்தை அதிகப்படுத்து, பொங்கல் பணம் எங்கே' என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பதாகைகளை ஏந்தியபடி தமிழக சட்டசபையின் மைய பகுதியில் கூச்சலிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் இது குறித்து கூறப்பட்டுள்ளது. அண்ணாமலை, அ.தி.மு.க.,வினருடன் ஆலோசனை செய்து, பார்லிமென்ட் முடக்கத்துக்கு பதிலடி தர திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டசபைக்குள்ளும், வெளியிலும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ., க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.