கடலுார் : கடலுாரில் நடந்த தொண்டை மண்டல இயற்கை வேளாண் திருவிழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்று, விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார்.தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, முதல் உலகின் மூத்தக்குடி, களஞ்சியம் இயற்கை வேளாண் நடுவம் சார்பில் தொண்டை மண்டல இயற்கை வேளாண் திருவிழா கடலுார் சுப்ராயலு திருமண மண்டபத்தில் நடந்தது.
முதல் உலகின் மூத்தக்குடி அமைப்பின் நிறுவனத் தலைவர் அசோக்குமார் தொடக்க உரையாற்றினார். இயக்குனர் ரெங்கநாயகி வரவேற்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறந்த விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி, பனங்கிழங்கால் செய்யப்பட்ட கேக்கை வெட்டி, அனைவருக்கும் வழங்கி பேசினார்.சிறப்பு அழைப்பாளர்களாக கடலுார் அரசு கல்லுாரி இணை பேராசிரியர் கோட்டைவீரன், உழவர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ரவீந்திரன், வேளாண் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.கண்காட்சியில் பாரம்பரிய விதைகள், வேளாண் இடுபொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பண்ருட்டி கணேசன், 475 வகையான பாரம்பரிய நெல் விதைகளை கண்காட்சிக்காக வைத்திருந்தார். அதனை பொதுமக்கள் மற்றும் கல்லுாரி மாணவியர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். கடலுார் மாவட்டத்தை முழுமையான இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்றுவது, சுற்றுச்சூழலை பாதிக்காத, இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை மக்களுக்கு தெரிவிப்பது, நாட்டு இன மாடுகளை பாதுகாத்தல் மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வேளாண் திருவிழா நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE