சென்னை--'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஐந்து மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:தமிழக தென் மாவட்ட கடற்கரையை ஒட்டி, 5.8 கி.மீ., உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக, இன்று கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மற்ற மாவட்டங்களில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென் மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யும். அதன்பின், அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலை காணப்படும்.சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் சேலானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.மழை நிலவரம்கடந்த, 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் அதிகபட்சமாக, 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தலா, 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.