இந்த நிதியாண்டில் முதல் அரையாண்டில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி நடந்திருப்பதன் மூலமாக, நாட்டின் டாப் 30 மாவட்டங்களில் இவ்விரு மாவட்டங்களும் இடம் பிடித்துள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டில், கொரோனா தாக்கம் காரணமாக நாட்டின் வர்த்தக ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் இது மூன்று மடங்கு அளவுக்கு உயர்ந்தது. உதாரணமாக, 2020 ஏப்ரலில் 10.17 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், 2021 ஏப்ரலில் 30.21 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருந்தது. அதற்குப் பின், கடந்த ஆண்டில் ஏற்றுமதி அளவு படிப்படியாக அதிகரித்து, இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஏற்றுமதி வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.அதில், தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாகவுள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் டாப் 30 மாவட்டங்களில், காஞ்சிபுரம் ஏழாமிடத்தையும், சென்னை 16வது இடத்தையும், திருப்பூர் 20 வது இடத்தையும், கோவை 29 வது இடத்தையும் பிடித்துள்ளன. காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் கார் மற்றும் அவை சார்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருப்பதால், ஏற்றுமதி வர்த்தகத்தின் மதிப்பு பெரிதாக உள்ளது.
ஆனால் இத்தகைய பெரிய நிறுவனங்கள் எதுவும் இல்லாமலே, ஜவுளித்துறை, இன்ஜினியரிங் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் திருப்பூர், கோவை மாவட்டங்கள் சாதனை படைத்துள்ளன. இதனால் பல்வேறு தொழில்களின் ஒருமித்த புகலிடமாக கொங்கு மண்டலம் மாறிவருவது உறுதியாகியுள்ளது.

ரூ.27 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி!
கடந்த ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து, முறையே 16 ஆயிரம் கோடி மற்றும் 11 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தம் 27 ஆயிரம் கோடி ரூபாய் (3632 மில்லியன் டாலர்) மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி கணக்கிட்டால் இந்த ஆண்டில் ரூ.54 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஏற்றுமதி நடக்குமென்று கணிக்கப்படுகிறது. ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்களிப்பே பிரதானமாகவுள்ளது. திருப்பூரிலிருந்து ரூ.13 ஆயிரத்து 846 கோடி, கோவையிலிருந்து ரூ.637 கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி நடந்துள்ளது. நுால், கைத்தறி, பெட்ஷீட் உள்ளிட்ட மற்ற ஜவுளிகளின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
இந்தத் துறையில் கோவையிலிருந்து ரூ.1740 கோடிக்கும், திருப்பூரிலிருந்து ரூ.1336 கோடிக்கும் ஏற்றுமதி நடந்துள்ளது.திருப்பூரில் ஆயத்தஆடை, நுால், கைத்தறி சார்ந்த தயாரிப்புகள், இயற்கை மற்றும் கனிம ரசாயனங்கள், இன்ஜினியரிங் உதிரி பாகங்கள், பிளாஸ்டிக் மற்றும் லினோலியம் ஆகியவை முறையே ஏற்றுமதியில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. கோவையில், இன்ஜினியரிங் பொருட்களின் ஏற்றுமதியே முதலிடத்தில் உள்ளது. இந்தப் பொருட்கள் மட்டும் ஆறு மாதங்களில் ரூ.5755 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.நுால், கைத்தறி போன்ற பொருட்களும், ஆயத்த ஆடைகள், தேயிலை, இயற்கை மற்றும் கனிம ரசாயனப் பொருட்களும் அடுத்தடுத்த அளவில் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன. இதில் தேயிலை மட்டும் ரூ.427 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகள், அந்நியச்செலாவணியை ஈட்டுவதில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன.
இந்திய ஜவுளி கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில்,''ஆண்டுக்கு ரூ.54 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி என்பது வளர்ச்சிக்கான மிகச்சிறந்த குறியீடாகக் கருதப்படுகிறது. ஜவுளித்துறைக்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தேவையான உதவியும், ஊக்கமும் தரப்படும்பட்சத்தில், ஏற்றுமதி அதிகரித்து அந்நியச் செலாவணியை அதிகப்படுத்துவதுடன் வேலை வாய்ப்பையும் அதிகப் படுத்த முடியும்; மாநிலத்தின் பொருளாதாரமும் உயரும்!'' என்றார்.
கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் இரண்டு மாவட்டங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில் துறையினரின் தேவைகளை அரசுகள் நிறைவேற்றித் தரும்பட்சத்தில், ஜவுளித்துறை, இன்ஜினியரிங் துறைகளில் மட்டுமின்றி, பல்வேறு விதமான உற்பத்திகளிலும், ஏற்றுமதியிலும் கொங்கு மண்டலம் பெரும் சாதனை படைக்குமென் பதில் சந்தேகமில்லை.
-நமது சிறப்பு நிருபர்-