'வாய்ப்புக்காக காத்திருக்காதே... உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்...'என்ற அப்துல் கலாமின் பொன்மொழிக்கு ஏற்ப கொரோனா காலத்தில் வாழ்வை இழந்த பலர் இன்று நம்பிக்கையோடு வெற்றி நடை போடுகின்றனர். இவ்வுலகில் நம்பிக்கை இழந்த பலருக்கு சாதனை புரிந்தவர்கள் முன்னுதாரணமாக இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளாக இருப்போர் இன்னும் உத்வேகம் அளிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வாடியூரில் வசிக்கும் பார்வையற்றவர் மன்மதன். இசை கலைஞரான இவர் தற்போது இசை ஆசிரியராகவும், கொரோனா கால சூழலிலும் சிறப்பாக ஆசிரிய பணி செய்து பலரது பாராட்டை பெற்றுள்ளார். இவர் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்ததாவது....
அம்மா கருப்பாயி பட்டாசு தொழிலாளி. தந்தை இல்லை. சிறு வயதில் இசையில் ஆர்வம் இருந்ததால் மதுரை அரசு இசை கல்லுாரியில் மூன்றாண்டு வயலின் படித்தேன். ஓராண்டு வயலினில் ஆசிரிய பயிற்சி முடித்தேன். பியானோ கீபோர்டு வாசிக்கவும், கர்நாடக சங்கீதமும் கற்று கொண்டேன். எங்கு தேடியும் வேலை கிடைக்கவில்லை. அப்போது அரசு பகுதி நேர இசை ஆசிரியர்களை நியமனம் செய்தது. திருத்தங்கல் நாராணாபுரம் அரசுபள்ளியில் பணி வாய்ப்பு கிடைத்தது. பகுதி நேரம் போக தனியார் பள்ளிகளிலும் இசை பயிற்சி அளித்து வந்தேன்.
2020ல் கொரோனா ஊரடங்கால் பள்ளி இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனது பயிற்சி வகுப்புகள் முடங்கின. பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்த போது சிவகாசியில் உள்ள பார்வையற்ற நண்பர் என்னை ஆன்லைன் இசை பயிற்சி அளிக்க 'ஐடியா' கொடுத்தார். என்னிடம் இருந்த ஸ்மார்ட் போனில் 'டாக் பேக்' முறையில் பயன்படுத்த கற்று கொண்டேன். பின் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக ஆன்லைன் வகுப்பு துவங்கினேன்.
என்னிடம் நேரில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்தேன். அவர்கள் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இசை பயிற்சி அளித்து வருகிறேன். தற்போது எனது தம்பியை போலீஸ் பயிற்சிக்கு படிக்க வைத்து வருகிறேன். வீடும் கட்டி உள்ளோம். ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி மாணவர்களின் இசை நிகழ்ச்சிகளை பதிவேற்றி வருகிறேன்.
என்னிடம் 25 மாணவர்கள் இசை பயின்று வருகின்றனர். கோவை தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் எங்கள் மாணவர்கள் இரண்டு மணி நேரம் தொடர்ந்து ஆன்லைனில் இசை வாசித்து சாதனை படைத்தனர். ஆரஞ்சு புக் ரெக்கார்டு, வேர்ல்டு ஆப் புக் ரெக்கார்டு அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. என் முயற்சிக்கு பெற்றோர், மாணவர்கள் உறுதுணையாக இருந்தனர். தன்னம்பிக்கையோடு செயலை செய்தால் நிச்சயம் மேலே வரலாம் என்றார்.
இவரை பாராட்ட 95971 70709
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE