கொரோனா 3வது அலை பரவத்துவங்கி விட்டதாக அமைச்சர் எச்சரிக்கை| Dinamalar

கொரோனா 3வது அலை பரவத்துவங்கி விட்டதாக அமைச்சர் எச்சரிக்கை

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (25) | |
சென்னை: தமிழகத்தில் டெல்டா, ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், 'கொரோனா மூன்றாம் அலை பரவல் துவங்கி விட்டது' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். 'முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டினால், 10 நாட்களில் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும்' என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, கல்லுாரி விடுதிகளில் சிறப்பு
கொரோனா 3வது அலை பரவத்துவங்கி விட்டதாக அமைச்சர்  எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் டெல்டா, ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், 'கொரோனா மூன்றாம் அலை பரவல் துவங்கி விட்டது' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். 'முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டினால், 10 நாட்களில் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும்' என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, கல்லுாரி விடுதிகளில் சிறப்பு சிகிச்சை முகாம்கள் அமைப்பதோடு, சென்னையின் பல்வேறு இடங்களிலும் 4,000 கூடுதல் படுக்கை வசதிகள் உருவாக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் 2020 மார்ச்சில், கொரோனா முதல் அலை பரவல் துவங்கியது. தொற்றின் தன்மை புரியாத நிலையில், மருத்துவ துறையினரின் தீவிர முயற்சியால் நிலைமை கட்டுக்குள் வந்தது. இதன்பின், 2021 மே மாதம் இரண்டாவது அலை பரவல் துவங்கியது.


கடும் தட்டுப்பாடு

மூச்சு திணறலால் தவித்தோருக்கு உடனடி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மருத்துவ மனைகளில், 'பெட்' கிடைக்காமல், வாயில்களிலேயே ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளுடன் தவம் கிடக்கும் அவலம் ஏற்பட்டது.அரசின் தீவிர முயற்சியால், பல்வேறு இடங்களில் இருந்து ரயில்கள் மற்றும் லாரிகளில் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் துரித கதியில் அமைக்கப்பட்டன. இதையடுத்து படிப்படியாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவல் டிசம்பரில் மெல்ல பரவத் துவங்கியது. அத்துடன், கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் தொற்றும் புதிதாக சேர்ந்து கொண்டது.


பல்வேறு கட்டுப்பாடுகள்

தற்போது, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், பண்டிகை காலம் என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலரும் முக கவசம் இல்லாமல், வழக்கம் போல சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவல் துவங்கி விட்டதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். சென்னை அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று நடந்த, 17வது மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் இதுவரை, 86.22 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும்; 58.82 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன.
சென்னையில் 91 சதவீதம் பேருக்கு முதல் தவணையும்; 69 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 8.39 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சென்னையில் அதிக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டாலும், கடற்கரை பகுதிகளில் உள்ள ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் கொரோனா மூன்றாவது அலை துவங்கி விட்டது.உலக சுகாதார அமைப்பு கூறியபடி, டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து, 'சுனாமி' அலை போல உலகில் பரவுகிறது. ஜனவரி 1ல் மஹாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட நாடு முழுதும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.


1,489 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் ஒரு நாளில் 600 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர். இது, தற்போது 1,489 ஆக அதிகரித்துள்ளது; 15 முதல் 18 வயதுடைய 33.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் துவங்க உள்ளது. வரும் 10ம் தேதி முதல், முன்கள பணியாளர்களுக்கு 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசிகள் போடப்படும்.
தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோருக்கும், மற்ற வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களுக்கும் மூன்று நாளில் 'நெகட்டிவ்' வருகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஐந்து நாட்கள் சிகிச்சை பெற்றால் போதும். தொடர்ந்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


வீட்டிலேயே சிகிச்சை

ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்தால், தேவையற்ற பதற்றம் ஏற்படலாம். அதை குறைக்கும் வகையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியோர், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற அறிவுறுத்தப்படும். தடுப்பூசி செலுத்தாதவர்கள், அறிகுறிகள் இன்றி தொற்று பாதித்தோருக்கும், 'பல்ஸ் ஆக்சி மீட்டர்' வழங்கி, வீடுகளில் வைத்தே ஆக்சிஜன் அளவு கண்காணிப்படும்.
மருத்துவ குழுவினர் இணைய வழியில் மருத்துவ உதவிகள் வழங்குவர். அதேநேரம், மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும்.சென்னை மாநில கல்லுாரிக்கு சொந்தமான விக்டோரியா விடுதியில் படுக்கைகள் அமைத்து, சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொடுங்கையூரில், 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் என, பல்வேறு இடங்களிலும் சேர்த்து 4,000 படுக்கைகள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி கூறுகையில், ''முக கவசம் அணியாமல் மக்கள் அலட்சியமாக இருந்தால், இன்னும் 10 நாட்களில் தொற்று பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும். மிகவும் கவனம் தேவை,'' என எச்சரித்தார்.கொரோனா மூன்றாம் அலை பரவ துவங்கி விட்டதால், தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் அரசு அறிவுறுத்தி உள்ளது.


'தேவையான தடுப்பூசி வழங்கிமத்திய அரசு துணை நிற்கிறது'

சென்னை, ஜன. 3--''தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை, மத்திய அரசு தொடர்ந்து வழங்கி துணை நிற்பதால், கொரோனா தடுப்பு பணிகளை விரைவாக செய்ய முடிகிறது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொரோனா பரவல் குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று காணொலி வழியாக ஆலோசனை நடத்தினார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் இருந்தபடி, தமிழகம் சார்பில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை, முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார். சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் உள்ளோருக்கும் தடுப்பூசிகள் போட சிறப்புக் கவனம் செலுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி, 10ம் தேதி முதல் 5.65 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 9.78 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை, மத்திய அரசு தொடர்ந்து வழங்கி ஆதரவளித்து துணை நிற்பதால் தான், கொரோனா தடுப்பு பணிகளை வேகமாக செய்ய முடிகிறது. அதற்காக, மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் நன்றி. இவ்வாறு சுப்பிரமணியன் பேசினார். ஆலோசனை கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X