இதுக்காக காங்., - எம்.பி.,யை பாராட்டலாம்!
நாயர் கடை முன் தேங்கியிருந்த மழை நீர் வடியாமல் இருந்தது. நண்பர்களுக்கு நாயர் இஞ்சி டீ கொடுத்து வரவேற்றார்.''ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யுறாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி. ''யாரு, என்ன விஷயமுன்னு விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''தமிழக மின் வாரியம் சார்புல டிச., 14 முதல், 20ம் தேதி வரை, மின் சிக்கன வாரம் கடைப்பிடிக்கிறாவ வே...''இந்த வருஷம், மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு மின் வாரிய பொறியாளர்கள், குறைந்த மின்சாரத்துல இயங்குற எல்.இ.டி., பல்பு உள்ளிட்ட சாதனங்கள் தொடர்பாக, பொது இடங்கள்ல விழிப்புணர்வு செஞ்சாவ வே...''கல்வி நிலையங்களுக்கு போய், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துறது எப்படின்னு மாணவர்களுக்கு விளக்கம் எல்லாம் அளிச்சாவ வே... ''ஆனால், சென்னை அண்ணா சாலையில இருக்குற மின் வாரிய தலைமை அலுவலகத்துல அதிகாரிகள் இல்லாத அறையில, 'ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்கள் இயங்கிகிட்டே இருக்குதாம் வே...''பல அறைகள்ல, எல்.இ.டி., பல்பு பொருத்தாம இருக்காவ வே...'' என விளக்கினார், அண்ணாச்சி.''இதுக்காக, காங்., -எம்.பி., விஜய் வசந்தை பாராட்டலாம் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''ஏன், அப்படி என்ன செஞ்சாரு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருல, கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய் வசந்த், 100 சதவீத வருகை பதிவு செஞ்சுருக்கார் ஓய்...''அவரு பதவியேற்ற ஆறு மாதத்துல, தொகுதி வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, 30 கேள்விகள் எழுப்பியிருக்கார் ஓய்...''அதுல சுற்றுலா தலங்களை மேம்படுத்தல், கூடுதலாக கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்குதல் ஆகியவற்றிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டு கிடைச்சதாம் ஓய்...''துறை ரீதியாகவும் மத்திய அமைச்சர்களை சந்திச்சு கோரிக்கை மனு கொடுத்துருக்காராம்... காங்கிரசுல இப்டியும் ஓர் எம்.பி.,யான்னு, பா.ஜ.,வினர் ஆச்சரியமா பேசிக்கறாளாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.''ம்... 'டெண்டர்' விடுவதுல காட்டும் ஆர்வத்தை, அந்த பணிகளை செயல்படுத்துறதுல காட்டுனா நல்லாஇருக்கும் பா...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்... ''மழையால பாதிச்ச மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை, நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு சொந்தமான சாலை எல்லாத்தையும் சரி செஞ்சு, புதிய சாலை போடுறது, செப்பனிடுவது போன்ற பணிகளுக்கு டெண்டர் விட்டுஇருக்காங்க பா...''சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், டெண்டர் விடுவதுல கண்ணும் கருத்துமாக இருந்து ரொம்ப ஆர்வம் காட்டுனாங்க பா...''ஆனால் நிதி ஒதுக்கீடு செஞ்ச நிலையில, பணிகளை செயல்படுத்துறதுல ஆர்வம் காட்டாமல், அதிகாரிகள் மந்தமாக இருக்காங்க பா...''இதனால, பல இடங்கள்ல இன்னும் வேலை நடக்கலை... குண்டும் குழியுமான சாலையில போக முடியாம வாகன ஓட்டிகள் ரொம்ப பாதிக்கப்படுறாங்க பா...''இந்த அதிகாரிகளால தான், ஆட்சியாளர்களுக்கும் கெட்ட பெயரு ஏற்படுதுன்னு, சமூக ஆர்வலர்கள் வருத்தப்படுறாங்க பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE