புதுடில்லி: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு, 'கொலீஜியம்' குழுவால் இரண்டாவது முறையாக பரிந்துரைக்கப்பட்ட 23 பேரின் பெயர்களுக்கு, 2018 முதல், மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவதாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான பரிந்துரைகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசிடம் முன்வைத்து வருகிறது.இந்நிலையில் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இது குறித்து உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்க 23 பேரின் பெயர்களை மத்திய அரசிடம் கொலீஜியம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை பரிசீலிக்கும்படி மத்திய அரசு கூறியது.இருப்பினும் அந்த 23 பேரின் பெயர்களை கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரைகளுக்கு, 2018ம் ஆண்டு முதல் இதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது. நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 1,098 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 402 இடங்கள் காலியாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.