புதுடில்லி-கொரோனா பரவல் அதிகம் இருந்த, 2020 - 21ம் நிதியாண்டில், 'தத்கல், பிரீமியம் தத்கல்' டிக்கெட் விற்பனை வாயிலாக ரயில்வேக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச் இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில், விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. தொற்று பரவல் குறைந்த நிலையில் தான் ரயில்வே சேவைகள் துவக்கப்பட்டன. கடைசி நேரத்தில் பயணம் செய்வோருக்காக 'தத்கல், பிரீமியம் தத்கல், டைனமிக்' என, மூன்று விதமான டிக்கெட்களை அறிமுகப்படுத்தியது. இவற்றுக்கு கட்டணம் அதிகம்.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர கவுர் கேட்ட கேள்விக்கு, ரயில்வே அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:ரயில்வே 2021 - 22ம் நிதியாண்டில் செப்., வரை டைனமிக் கட்டணத்தால் 240 கோடி ரூபாயும், தத்கல் டிக்கெட் விற்பனையால் 353 கோடி ரூபாயும், பிரீமியம் தத்கல் டிக்கெட் விற்பனையால் 89 கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட 2020 - 21ம் நிதியாண்டில் தத்கல் டிக்கெட் விற்பனையால் 403 கோடி ரூபாயும், பிரீமியம் தத்கல் டிக்கெட் விற்பனையால் 119 கோடி ரூபாயும் ரயில்வேக்கு கிடைத்தது. டைனமிக் கட்டணத்தால் 511 கோடி ரூபாய் ஈட்டியது,எவ்வித கட்டுப்பாடும் இல்லாத 2019 - 20ம் நிதியாண்டில் டைனமிக் கட்டணத்தால் 1,313 கோடி ரூபாயும், தத்கல் டிக்கெட் விற்பனையால் 1,669 கோடி ரூபாயும், பிரீமியம் தத்கல் டிக்கெட்டுகளால் 603 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்தது. இவ்வாறு பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.