புதுடில்லி: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்யும் பார்லி., நிலைக்குழுவில், ஒரேயொரு பெண் எம்.பி., தான் இடம் பெற்றுள்ளார்.

நம் நாட்டில் தற்போது ஆண்களின் திருமண வயது 21 ஆகவும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது. 'ஆண்களைப் போலவே பெண்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்' என ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதை பார்லிமென்டில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து இந்த மசோதாவை கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான பர்லிமென்ட் நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலைக்குழுவின் தலைவராக பா.ஜ.,வை சேர்ந்த வினய் சஹஸ்ரபுத்தி உள்ளார். 31 எம்.பி.,க்கள் இடம் பெற்று உள்ள இந்த குழுவில், பெண் எம்.பி.,யாக, திரிணமுல் காங்கிரசை சுஷ்மிதா தேவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார். சுஷ்மிதா தேவ் கூறுகையில், ''பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்யும் குழுவில் கூடுதல் பெண் எம்.பி.,க்கள் இருக்க வேண்டும். இது பற்றி நிலைக்குழுவின் தலைவரிடம் தெரிவிப்பேன்,'' என்றார்.