சென்னை-'பட்டாசு ஆலை விபத்துக்களை தடுக்கவும், தொழிலாளர்களின் உயிர்ப்பலியை தவிர்க்கவும், அரசு ஒரு நிரந்தர செயல் திட்டம் வகுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:புத்தாண்டு பிறக்கும் போதே, சிவகாசி அருகே புதுப்பட்டியில், வழிவிடுமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக, உரிமையாளர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
ஆலை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விதிமீறல் காரணமாக, பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.இந்நிலை தொடர்கதையாக மீண்டும் மீண்டும் நிகழக்காரணம் என்ன என்பதை அரசு கண்டறிய வேண்டும். அரசு தீவிரமாக ஆராய்ந்து, பட்டாசு ஆலை நிர்வாகத்திற்கும், அதன் தொழிலாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மேலும், பட்டாசு ஆலை விபத்துக்களையும், தொடரும் உயிர்ப்பலியை தடுக்கும் வகையிலும், அரசு ஒரு செயல் திட்டம் வகுக்க வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.