சென்னை-'கோவையில் இருந்து திருநெல்வேலி, துாத்துக்குடிக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும்' என, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம் விபரம்: கோவையில் இருந்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு பயணியர் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திருச்சி வழியாக, - காரைக்காலுக்கு தினமும் ரயில் இயக்க வேண்டும்.கோவையில் இருந்து திருநெல்வேலி, துாத்துக்குடிக்கு இன்டர்சிட்டி ரயில்களை இயக்க வேண்டும்.
கோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், கோவை - செங்கோட்டை - கொல்லம் விரைவு பயணியர் ரயில்களை மீண்டும் பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும்.பொள்ளாச்சியில் தயாராகும் தென்னை சார்ந்த பொருட்கள் மற்றும் இளநீர் போன்றவை, துாத்துக்குடி துறைமுகம்; கேரள மாநிலம் கொச்சி துறைமுகங்கள் வழியாக, வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகின்றன.
அவற்றை கன்டெய்னர் லாரிகளில் துறைமுகங்களுக்கு அனுப்ப கூடுதல் செலவாவதால், பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில், ரயில்வே சரக்கு முனையம் அமைக்க வேண்டும். ரயில் பெட்டி, சரக்கு பெட்டிகள் பராமரிக்க, பொள்ளாச்சியில் பணிமனை அமைக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE