புதுடில்லி: நம் அண்டை நாடான பாகிஸ்தான் கல்லுாரிகளில் 'சீட்' வாங்கித் தருவதாக காஷ்மீர் மாணவர் மற்றும் பெற்றோரிடம் மோசடி செய்ததாக, ஹூரியத் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களை ஏமாற்றியதாக காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான ஹூரியத்தைச் சேர்ந்தவர்கள் மீது பல புகார்கள் வந்தன. அது குறித்து விசாரித்த ஜம்மு - காஷ்மீரின் விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் உள்ள பல்கலைகளில் மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் இலவசமாக சேர்ப்பதாக, காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களிடம் ஹூரியத்தைச் சேர்ந்தவர்கள் ஆசை காட்டிஉள்ளனர்.

போலியான பெயரில் நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி மாணவர்களை தேர்வு செய்துள்ளனர்.பாக்.,குக்கு சென்ற பின், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் போலியானது என்பது மாணவர்களுக்கு தெரிய வரும். இதையடுத்து, ஹூரியத் அமைப்பினரை தொடர்பு கொள்வர்.
பணம் கொடுத்தால் சீட் வாங்கித் தருவதாக மிரட்டுவர். அதிக பணத்தை வாங்கி, அங்குள்ள சில ஏஜன்ட்கள் மூலம் கல்லுாரிகளில் இடம் வாங்கித் தருவர். இதிலும் சிலர் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.இவ்வாறு மோசடி செய்து கிடைக்கும் பணத்தை, காஷ்மீரில் பயங்கரவாதத்தை துாண்டுவதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.இவ்வாறு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE