சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளை துவக்க, மத்திய அரசு 75 கோடி ரூபாய் வழங்குகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கூட்டம் சேருவதை தடுக்கவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து, சமீபத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில், கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்த, 75 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இந்த நிதியில், அரசு மருத்துவமனைகளில் கொரோனா அவசர சிகிச்சைபிரிவு அமைக்கப்பட்டு படுக்கைகள், ஆக்சிஜன் குழாய்கள், நவீன கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், தமிழக மருத்துவ பணிகள் கழகத்திடம், இந்த நிதி வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே, தமிழக மருத்துவ பணிகள் கழகத்திடம் 52 கோடி ரூபாய் நிதி உள்ளது. இரண்டு நிதியையும் சேர்த்து, 127 கோடி ரூபாய்க்கு இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, ஓரிரு நாட்களில் வெளியாகலாம்.