ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்ட, போலீசார் அதிரடி வியூகம் வகுக்கும் பணியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். அராஜக ரவுடிகளின் ஆட்டத்தை ஒடுக்க, அரசு அனுமதியுடன் என்கவுன்டர் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
![]()
|
லெட்டர்பேடு இந்த தொழிற்சாலைகளை, சென்னை மற்றும் புறநகர் ரவுடிகள், 'பொன் முட்டையிடும் வாத்து' போல் பயன்படுத்தி வருகின்றனர். உள்ளூர், வெளியூர், வெளி மாநில ரவுடிகள் என, கூடாரமிட்டு, தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தை மிரட்டி, வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகினறனர்.
![]()
|
ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்படக்கூடும்.
அப்படி நடந்தால், அது மாநில வருவாயை பெரிதும் பாதிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் ரவுடிள் ராஜ்ஜியம் பெருகிவிட்டது குறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்நிலையில், ரவுடிகள் மற்றும் லெட்டர் பேர்டு கட்சி கைத்தடிகளின் அட்டூழியம் குறித்து, உளவுத்துறை வாயிலாக அறிந்த, காவல் துறை உயர் அதிகாரிகள், சென்னை புறநகர் பகுதிகளில், ஏ.டி.எஸ்.பி., 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரையை களமிறக்கி உள்ளனர்.
எச்சரிக்கை
இவரது தலைமையிலான போலீசார், சென்னை புறநகர் பகுதியான ஒரகடம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாலாட்டும் ரவுடிகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுட்டு உள்ளனர்.
மாமூல் கேட்டு மிரட்டும் தாதாக்களின் பெயர், இருப்பிடம், நடத்தை, ஏற்கனவே வழக்கில் சிக்கியவரா என்பது உள்ளிட்ட ஒட்டு மொத்த விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
ரவுடிகளின் ஆட்டத்தை ஒடுக்கும் பணியின் போது, எல்லை மீறும் தாதாக்களை தகுந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டுனா என்கவுன்டரில் போட்டுத் தள்ளவும் வாய்ப்பிருப்பதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரவுடிகள் அடங்கி, ஒடுங்கிவிடுவதே அவர்களுக்கு நல்லது எனவும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
திருவண்ணாமலையில், ஏ.டி.எஸ்.பி.,யாக பணிபுரிகிறேன். தற்போது, 'ஆன் டூட்டி'யாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், ஒரடகம் பகுதியில் பணியமர்த்தப்பட்டு உள்ளேன். சட்ட ரீதியாக, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு தயாராகி வருகிறோம். ரவுடிகளின் ராஜ்ஜியத்தை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தாதாக்களின் ஆட்டம், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். வெள்ளத்துரை,காவல்துறை ஏ.டி.எஸ்.பி.,
![]()
|
இடம் மாறுவதை தவிர வேறு வழியில்லை!
ரவுடிகளின் அட்டகாசம் குறித்து, ஒரகடம் சிப்காட் தொழில்சாலை நிர்வாகிகள் கூறியதாவது:ரவுடிகள், தங்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவது முதல், அன்றாட டீ, மது செலவு வரை, அத்தனைக்கும் தொழிற்சாலைகளை மிரட்டி, வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
ஒழுங்காக வேலை செய்யாத தொழிலாளர்களை தங்கள் கைக்குள் போட்டுக்கொள்ளும் கட்டப்பஞ்சாயத்த பேர்வழிகள், வேண்டுமென்றே தொழிலாளர்களை துாண்டிவிட்டு, கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியும் நடக்கிறது. ரவுடிகளின் கைக்கூலிகள் சிலரால், பெண் தொழிலாளர்களின் மானம், உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது.
தொழிலாளர்களை துாண்டிவிட்டு, போராட்டம் என்ற பெயரில் தொழிற்சாலைகளை இயங்கவிடாமல் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. மாமூல் வசூலிப்பதில், ரவுடிகளுக்கு இடையே யார் பெரியர்கள் என்ற போட்டியும் உள்ளது.விலை நிர்ணயம், டெண்டரில் மூக்கை நுழைப்பது, தொழிற்சாலையில் சுகாதார சீர்கேடு என, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது என, ரவுடிகளின் அட்டூழியங்கள் பல விதம். ரவுடிகளின் அட்டூழியம் தொடர்ந்தால், தொழிற்சாலைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE