புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வினியோகிக்கும் திட்டத்தில், 'அட்சய பாத்திரம்' நிறுவனம், வரும் 5ம் தேதி முதல் கால்பதிக்க உள்ளது. இதன் மூலம், புதுச்சேரி அரசுக்கு ஆண்டிற்கு 6 கோடி ரூபாய் மிச்சமாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் 300 அரசு பள்ளிகள் உள்ளன. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 50 ஆயிரம் மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக குருசுக்குப்பம், பிள்ளைச்சாவடி, சண்முகாபுரம், கிருமாம்பாக்கம், ஏம்பலம், கல்மண்டபம், கூனிச்சம்பட்டு உள்பட 11 இடங்களில் மத்திய சமையல் கூடங்களை நிறுவி உள்ளது.
இந்நிலையில், கடந்த 2018 ஜூலை மாதம், காங்., ஆட்சி காலத்தில், மாணவர்களுக்கு ஒரே விதமான சத்தான மதிய உணவு வழங்க, 'அட்சய பாத்திரம்' என்ற நிறுவனத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.இந்நிறுவனத்திற்கு சமையல் கூடம் அமைக்க, லாஸ்பேட்டை மத்திய உணவுக் கூடம் ஒதுக்கப்பட்டது அங்கு தினசரி 1 லட்சம் மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்கான உட்கட்டமைப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன.

இந்த சமையல் கூடத்திற்கு உயர் மின்னழுத்தப் பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், கடந்த இரு ஆண்டுகளாக பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன. அதையடுத்து, வரும் 5ம் தேதி முதல், அட்சய பாத்திரம் நிறுவனம் புதுச்சேரியில் உள்ள 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வினியோகிக்கும் திட்டத்தில் கால்தடம் பதிக்க உள்ளது.முதல்வர் ரங்கசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில், கவர்னர் தமிழிசை மதிய உணவு தயாரிப்பு சமையல் கூடத்தை திறந்து வைத்து, உணவு வழங்கும் பணியையும் துவக்கி வைக்க உள்ளார்.
அடுத்த சில வாரங்களில், படிப்படியாக 11 மதிய உணவு சமையல் கூடங்களுக்கு கீழ் உள்ள 300 அரசு பள்ளிகளுக்கும் மதிய உணவு வினியோகிக்கும் பணியை அட்சய பாத்திரம் நிறுவனம் எடுத்துக் கொள்ள உள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு புதுச்சேரி அரசு தற்போது செலவழிக்கும் தொகையில், பாதி தொகைக்கு மட்டுமே அட்சய பாத்திரம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மதிய உணவு திட்டத்திற்கு செலவழிக்கும் தொகையில் பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும்.
பாதி செலவு குறையும்
புதுச்சேரியில் உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் மதிய உணவு வழங்க மத்திய அரசு ஒரு மாணவருக்கு 2.98 ரூபாய் தருகிறது. ஆனால் புதுச்சேரி அரசுக்கு 8.90 ரூபாய் செலவாகிறது.அதாவது, ஒரு மாணவருக்கு 5.92 ரூபாய் புதுச்சேரி அரசு கூடுதலாக செலவழிக்கிறது. இதில் சரி பாதியாக இனி 2.96 ரூபாய் மட்டுமே புதுச்சேரி அரசுக்கு செலவாகும். இதேபோல், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க மத்திய அரசு பங்களிப்பு ஏதும் இல்லாமல், மாநில அரசு செலவழிக்கிறது.
தற்போது, சராசரியாக ஒரு மாணவருக்கு 11.40 ரூபாய் செலவிடுகிறது. இனி, இதில் அரசுக்கு 5.70 ரூபாய் மட்டுமே செலவாகும்.ஒட்டுமொத்தமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு, ஓராண்டுக்கு புதுச்சேரி அரசு 10 கோடி ரூபாயும், மத்திய அரசு 5 கோடி ரூபாய் என மொத்தம் 15 கோடி ரூபாய் செலவு செய்கின்றன. அட்சய பாத்திரம் நிறுவனம் மூலம் மதிய உணவு வினியோகிக்கப்பட உள்ள தன் மூலம், ஆண்டிற்கு6 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும்.
தற்போது வாரத்திற்கு மாணவர்களுக்கு மூன்று நாட்கள் சாம்பார் சாதம், 2 நாட்கள் தக்காளி சாதம், புளி சாதம் உள்ளிட்ட 'வெரைட்டி ரைஸ்' வழங்கப்படுகிறது. இந்த உணவு பட்டியல் தொடர்வதோடு, தயிர், இனிப்பு உள்ளிட்ட சில உணவுகள் கூடுதலாக வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சுடச்சுட...
பள்ளிகளில் தற்போது ஒரே விதமான உணவு வழங்கினாலும், செய்முறை, தண்ணீர் போன்றவற்றால் சுவை மாறுபடுகிறது. அட்சய பாத்திரம் திட்டத்தில், மாணவர்களுக்கு, சுடச்சுட, ஒரே சுவையில் உணவு வழங்கப்படும். இதற்காக மதிய உணவினை எடுத்துச் செல்ல 40 இன்ஸ்லேட்டர் வாகனங்கள் ஹைட்ராலிக் வசதிகளுடன் களத்தில் இறக்கப்பட உள்ளன.
யார் இந்த அட்சய பாத்திரம்
'அட்சய பாத்திரம்' அறக்கட்டளை, மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்த அறக்கட்டளை இந்தியா முழுவதும் தற்போது 19,039 அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளைச் சேர்ந்த 18.02 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகிறது. இதற்காக, 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 58 சமையல் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதற்கான நிதியை பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களிடம் இருந்து இந்த அறக்கட்டளை திரட்டுகின்றது.
ஊழியர்களுக்கு பாதிப்பா
புதுச்சேரி மதிய உணவுக் கூடங்களில் தற்போது 140 பேரும், ரொட்டி பால் திட்டத்தில் 800 பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர். மதிய உணவு வழங்கும் முழு பொறுப்பினை அட்சய பாத்திரம் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், உணவுக் கூட ஊழியர்கள் பல்வேறு பள்ளிகளுக்கு எம்.டி.எஸ்., பணிக்கு அனுப்பப்பட உள்ளனர். எனவே மதிய உணவு திட்ட ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE