புதுச்சேரி: 'புதுச்சேரியில் ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ள 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்' என, சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, சிலரது மாதிரிகள் பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.
கடந்த வாரம் புதுச்சேரியில் முதியவர், கல்லுாரி மாணவி ஆகிய இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஒமைக்ரான் அறிகுறி உள்ள மேலும் 11 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு நிருபர்களிடம் கூறியதாவது:
பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது, 'எஸ்ஜின் டிராப்' என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் ஒமைக்ரான் தொற்று அறிகுறி தென்பட்டால், உடனடியாக அந்த மாதிரிகள் பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஜின். டிராப் பரிசோதனையில் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ளது. இதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தி உள்ளோம். அவர்களின் மாதிரிகளை பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
புதுச்சேரியில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்தால், பள்ளிகளை மூட பரிந்துரை செய்வோம். தற்போது அதிகமாகவில்லை. ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் சோதனை முடிவு கிடைக்க 10-15 நாட்கள் வரை ஆகிறது. அதனால், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்று கண்டறியும் ஆய்வகம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஓரிரு மாதத்தில் ஆய்வகம் அமைக்கப்படும்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. ஒமைக்ரான் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வரும் வாரத்தில் புதுச்சேரியிலும் தொற்று எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE