வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் சேவையின் குழுத்தலைவராக தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோ மொபைல் துறையில் முன்னணி நிறுவனமான டெஸ்லா, எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் கொடிக்கட்டி பறக்கிறது. இதன் ஆட்டோ பைலட் சேவையின் குழுத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உடனான விவாத நிகழ்ச்சியின்போது டெஸ்லா ஆட்டோ பைலட் சேவை குறித்து பேசும்போது, ‛டெஸ்லாவின் ஆட்டோபைலட் சேவை குறித்து மக்கள் பாராட்டும் போது என்னையும், ஏ.ஐ., பிரிவு தலைவரான ஆண்ட்ரேஜ்ஜை பாராட்டுவார்கள். ஆனால், உண்மையில் இந்த பாராட்டுக்கு சொந்தக்காரர் அசோக் தான்,' எனப் பேசியிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‛அசோக் தான் டெஸ்லா ஆட்டோபைலட் அணிக்கு முதல் ஆளாகத் தேர்வு செய்யப்பட்ட நபர். சுமார் 7 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்டோபைலட் சேவை மற்றும் ஸ்டார்ஷிப் இன்ஜின் தான் தற்போது நாங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலான விஷயம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த அசோக்?

இப்படி உலகின் முன்னணி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள அசோக் எல்லுசாமியின் பூர்வீகம் தமிழகம். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் 2005-2009ம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். பின்னர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றிய அவர், அமெரிக்காவின் கார்கி மெலான் பல்கலையில் ரோபோட்டிக்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். 2014ல் டெஸ்லா ஆட்டோபைலட் பிரிவின் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியில் சேர்ந்த அசோக் எல்லுசாமி 8 ஆண்டுகளில் அக்குழுவின் தலைவராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE