'போர்டு' மட்டுமே தொங்கும்!
என்.பாடலீஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதி முதல் அரசு அதிகாரிகள் வரை எந்த தயக்கமோ, பயமோ இன்றி, ஊழல் புரிவதும், லஞ்சம் வாங்குவதும் சர்வ சாதாரணமாகி விட்டது.இதற்கு காரணம், ஒரு வேளை லஞ்சம் வாங்கி பிடிபட்டால், அரசு அதிகாரி உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படுவார். அதாவது, குறிப்பிட்ட காலம் வரை வேலை செய்யாமல், பாதி சம்பளம் வாங்குவார். காலகெடுவுக்குள் விசாரனை முடியவில்லை என்றால், முழு சம்பளம் கிடைக்கும்.
அதில்லாமல், அந்த அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்படும். அந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்தாலும், உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல் முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்படும்; அதுவரை அவரது வேலைக்கு எந்த பங்கமும் வராது.இன்றைய நிலையில், நீதிபதிகளின் அதிக பணிச்சுமை காரணமாக, தீர்ப்பு வர பல ஆண்டுகள் ஆகிறது.இதை சாதகமாக நினைக்கும் லஞ்ச பேர்வழிகள், 'கடைசி தீர்ப்பு வருவதற்குள் உயிரோடு வாழ்ந்தால் தீர்ப்பை சந்திப்போம். உயிரோடு இல்லாவிட்டால், வழக்கு தள்ளுபடி ஆகிவிடும். சேர்த்த சொத்து, எந்த பங்கமும் இன்றி வாரிசுகள் அனுபவிப்பர்' என நினைக்கின்றனர்.
உயிரோடு இருக்கும் போதே தீர்ப்பு வந்தாலும், அதிகபட்சமாக சில ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்; அதையும் சொகுசாக கழிக்க, பல வழிகள் உள்ளது.தண்டனை முடிந்து வெளியே வந்த பின், அவர்கள் சாப்பாட்டிற்கு கையேந்த போவதில்லை. லஞ்சம் வாங்கி, பல தலைமுறைக்கு சேர்த்து வைத்த சொத்து மூலம் வாழ்க்கையை கடைசி காலம் வரை சுகமாக அனுபவிக்கலாம்.இவ்வளவு வாய்ப்புகள் இருப்பதால் தான், லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு, நீதிமன்றங்களின் கட்டமைப்பை அதிகரிப்பது. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, விரைவான தீர்ப்பு கிடைக்க செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
குற்றம் நிரூபணமானால் அவரின் மற்றும் பினாமி பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும்.இவற்றை மேற்கொள்ளாவிட்டால், அரசு அலுவலகங்களில், 'லஞ்சம் வாங்குவது குற்றம்' என்று, 'போர்டு' மட்டுமே தொங்கும்!
'கமிஷனை' ஒழிக்க முடியுமா?
அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நெல்லை பள்ளியில் சுவர் இடிந்து, மூன்று மாணவர்கள் பலியாகினர்; அதன் பின் தான், அரசுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளி கட்டடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தர
விட்டுள்ளது.ஆண்டுதோறும் பொதுப்பணித் துறையின் பொறியாளர்களின் மேற்பார்வையில், பள்ளி கட்டடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் சுகாதாரம், தீயணைப்பு, மின்சார துறை சார்பிலும், பள்ளி நடத்துவதற்கு தடையின்மை சான்று வழங்க வேண்டும்.
அந்த அரசு அதிகாரிகள், தங்கள் பணியை முறையாக மேற்கொள்ளாததால் தான், விபத்து நிகழ்ந்து, உயிர் பலி ஏற்படுகிறது.அதிகாரிகளின் அலட்சியத்தால், 2004ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஏற்பட்டு பிஞ்சு குழந்தைகள், 94 பேர் உடல் கருகி இறந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.அந்த கோர நிகழ்வுக்கு பின் தான், அனைத்து பள்ளிகளிலும் அவசர அவசரமாக கீற்றுக் கொட்டகையை அகற்றினர்.
அதாவது விபத்து நடந்தால் தான், அரசுக்கு புத்தி வருகிறது. 'வரும் முன் காப்போம்' என்பதை, அரசு மறந்து விடுகிறது.தற்போது நெல்லை விபத்து ஏற்பட்ட பின், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது, அரசு சார்பில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் தரமற்றதாக உள்ளன.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய கட்டடங்கள், இன்றும் கம்பீரமாக இருக்கின்றன.இன்றைய தமிழக அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்கள், 10 ஆண்டுகள் கூட நிலைத்து நிற்பதில்லை. குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் கட்டிய குடியிருப்பு, ஒரே ஆண்டில், 'பல்லிளித்தது'
நினைவிக்கலாம்.திராவிட கழகங்கள் ஆட்சிக்கு வரும் முன், கட்டடம் கட்டும் ஒப்பந்தக்காரர்களிடம், அரசு அதிகாரிகள் கண்டிப்புடன் தரமான வேலையை வாங்கினர்.ஆனால், திராவிட கழகங்களின் ஆட்சியில், 'கமிஷன்' எனும் மோசடி கொடிக்கட்டி பறக்கிறது.அரசு திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்ததாரரிடம், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அதிகமாக கமிஷன் தொகை பெறுகின்றனர். அதனால் அதிகாரிகளின் கண்காணிப்பு ஏதுமின்றி, தரமின்றி கட்டடம்
கட்டப்படுகிறது.கமிஷன் கொடுக்கும் நிலையில்லை என்றால், ஒப்பந்ததாரர்கள் தரமான கட்டடத்தை கட்டுவர். தமிழக அரசு, கமிஷன் முறையை ஒழிக்க
வேண்டும்.
நீதிபதி நசீரின் கருத்து சரியே!
வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ------------இந்திய கலாசாரம் தொன்மையானது; பாரம்பரியமிக்கது. வாழ்க்கைக்கு, ஆட்சிக்கு, நீதி பரிபாலனத்துக்கு தேவையான அத்தனை நெறிகளையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்து தொகுத்து வைத்துள்ளனர், நம்
முன்னோர்.முனிவர்கள், பரிபாஷையில் அவற்றை சுருக்கமாக கூறியுள்ளனர். தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இன்று மெல்ல அவற்றை கூர்ந்து வாசித்து, பொருள் கண்டு வருகின்றனர்.தமிழில் உள்ள திருக்குறள், நாலடியார், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை போல, சமஸ்கிருத மொழியில் பல துறைகளுக்கான அறிவுரைகள், வழிகாட்டு குறிப்புகள், நெறிமுறைகள் உள்ளன.மந்திரங்கள் மட்டுமல்ல... நீதி, தேச பரிபாலன நெறிகள், மருத்துவ சிகிச்சை முறை துல்லியமாக வரையப்பட்டுள்ளன. அன்னிய நாட்டினர் அவற்றை தேடி, நாடி வந்து அறிகின்றனர்.உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர், 'பண்டைய நீதி நெறிகளை, இன்றைய சட்ட கல்லுாரி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆங்கிலேய காலனி ஆட்சி சட்டங்கள் மற்றும் நீதி நிர்வாக கட்டமைப்பு, இந்தியாவுக்கு ஏற்றது அல்ல. மனு, கவுடில்யர், பிரிஷாஸ்பதி போன்ற பண்டைக்கால நீதிநுால் ஆசிரியர்கள், அற்புதமான சட்டம், நீதி நிர்வாக நெறிகளை வகுத்து தந்துள்ளனர்' எனக் கூறியுள்ளார்.
நம் நாட்டில் பின்பற்றப்படும் பிரிட்டிஷ் ஆட்சி கல்வி முறையை மட்டுமல்ல, நீதிநெறியையும், நீதித்துறை கட்டமைப்பையும் சீரமைக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
இதைத் தான், உச்ச நீதிமன்ற நீதிபதி, அப்துல் நசீரின் கருத்து உறுதிப்படுத்துகிறது. அவர் கூறியது முற்றிலும் சரியே.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE