தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி: பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க, மாணவர் - ஆசிரியர் குழு ஏற்படுத்த வேண்டும். மாணவியர் கூறும் புகார்களை அலட்சியம் காண்பிக்காமல், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.நல்ல அறிவுரை தான். வெறும் பேச்சுடன் நின்று விடாமல், இதை உங்கள் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளிலாவது அமல்படுத்தலாமே!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி அறிக்கை: ஜம்மு - காஷ்மீரில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டு, மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன் வரை, இந்த, 'மாஜி'க்கள் வீட்டுக்காவலில் ஓராண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்த போது, அந்த யூனியன் பிரதேசம் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருந்தது. அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த மாநில நிர்வாகம் விரும்புகிறதோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: தமிழகத்தில் தி.மு.க., ஐந்து முறை ஆட்சியில் இருந்துள்ளது. சென்னை மேயராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் ஸ்டாலின் இருந்துள்ளார். எனினும், சென்னைக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அதனால் தான், லேசான மழைக்கு கூட சென்னை தவிக்கிறது. ஆனால் அவர், எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிறார்.சென்னையை சீர்படுத்த, ஒன்றிரண்டு மாதங்கள் போதாதா... எட்டு மாதங்களாக இப்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க., அரசு பழி போட்டு தப்பிக்கத் தான் பார்க்கிறதே தவிர, எதையும் செய்ய தயாராக இல்லையோ?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி: பா.ஜ.,வுக்கு கோவிலும் முக்கியம்; சர்ச்சும் முக்கியம்; மசூதியும் முக்கியம். ஆனால், தி.மு.க., அரசின் செயல்பாட்டை பார்க்கும் போது, ஒரு மதத்திற்கு மட்டுமே எதிராக இருக்கிறது.எம்மதமும் சம்மதம் என இருப்பவர்கள் தான் ஹிந்துக்கள். ஆனால், ஹிந்துக்கள் தவிர்த்து பிற மதங்கள் சம்மதம் என்ற நிலைப்பாட்டை, தி.மு.க., அரசு கொண்டுள்ளது என்கிறீர்களோ?
அ.தி.மு.க., மகளிரணி செயலர் வளர்மதி பேச்சு: பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாத, தி.மு.க.,வினர் எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தீவிரமாக ஓட்டு சேகரித்து வெற்றி பெற்றனர். ஆனால், பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த, அ.தி.மு.க.,வினர் எதிரணியினருடன் கைகோர்த்து, கட்சியை தோல்வி பாதைக்கு அழைத்து சென்றனர்.எதிரணியினர் என நீங்கள் சொல்வது, சசிகலா - தினகரன் அணியைத் தானே?
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி: தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டும்; கடந்த காலங்களைப் போல அல்லாமல் நிமிர்ந்து நிற்கும் முதல்வர், யாரை பற்றியும் அச்சப்படாத முதல்வர் ஸ்டாலின் நமக்கு கிடைத்துள்ளார். ரொம்ப துாக்கி வைக்காதீங்க... சில மாதங்களுக்கு முன் கூட, உங்களைப் பற்றி அவரும், அவரைப் பற்றி நீங்களும், 'பாராட்டி' பேசிய வீடியோக்கள், சமூக வலைதளங்களில் உலா வருகின்றன!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE