புதுடில்லி :உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, வரும் 15ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தும்படி தலைமைச்
செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடுப்பூசி போடும் பணி மந்தமாக உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்தாலும்,தேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இவற்றில் பஞ்சாபில் காங்., ஆட்சியும், மற்ற மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியும் நடக்கின்றன.
பிரசாரம்
தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வரும் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசார பணிகளை ஏற்கனவே துவக்கிவிட்டன. பொதுக் கூட்டங்களில் மக்கள் திரளாக கூடத் துவங்கி
உள்ளனர்.'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களை ஒத்திவைக்கும்படி சுகாதாரத்துறை நிபுணர்கள்
பரிந்துரைத்தனர். 'ஆனால் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான வாய்ப்பு குறைவு' என, தகவல் வெளியாகி உள்ளது. திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
நேரில் ஆய்வு
தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தொற்று பரவல் நிலவரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் ராஜிவ் குமார் மற்றும் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் சமீபத்தில் நேரில் ஆய்வு செய்தனர். தொற்று பரவல் நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷணிடம் தகவல் கேட்டறிந்தனர். 'சட்டசபை தேர்தல்களை திட்டமிட்ட காலத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து கட்சியினரும் விரும்புகின்றனர்.
'பிரசாரம் மற்றும் ஓட்டுப் பதிவின் போது தொற்று தடுப்பு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வோம்' என, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தல் நடக்கும் ஐந்து மாநில தலைமை செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ளோர் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர். எனவே, அவர்கள் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். இரண்டு டோஸ் போட்டு, ஒன்பது மாதங்கள் ஆனவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஐந்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டும்.
100 சதவீதம்
உத்தரகண்ட், கோவாவில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 100 சதவீதத்தை நெருங்கியுள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளது. மணிப்பூரில் முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி மந்தமாக இருப்பது கவலை அளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE