உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
என்.பாடலீஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதி முதல் அரசு அதிகாரிகள் வரை எந்த தயக்கமோ, பயமோ இன்றி, ஊழல் புரிவதும், லஞ்சம் வாங்குவதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

இதற்கு காரணம், ஒரு வேளை லஞ்சம் வாங்கி பிடிபட்டால், அரசு அதிகாரி உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படுவார். அதாவது, குறிப்பிட்ட காலம் வரை வேலை செய்யாமல், பாதி சம்பளம் வாங்குவார். காலகெடுவுக்குள் விசாரனை முடியவில்லை என்றால், முழு சம்பளம் கிடைக்கும்.
அதில்லாமல், அந்த அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்படும். அந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்தாலும், உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல் முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்படும்; அதுவரை அவரது வேலைக்கு எந்த பங்கமும் வராது.இன்றைய நிலையில், நீதிபதிகளின் அதிக பணிச்சுமை காரணமாக, தீர்ப்பு வர பல ஆண்டுகள் ஆகிறது.

இதை சாதகமாக நினைக்கும் லஞ்ச பேர்வழிகள், 'கடைசி தீர்ப்பு வருவதற்குள் உயிரோடு வாழ்ந்தால் தீர்ப்பை சந்திப்போம். உயிரோடு இல்லாவிட்டால், வழக்கு தள்ளுபடி ஆகிவிடும். சேர்த்த சொத்து, எந்த பங்கமும் இன்றி வாரிசுகள் அனுபவிப்பர்' என நினைக்கின்றனர்.
உயிரோடு இருக்கும் போதே தீர்ப்பு வந்தாலும், அதிகபட்சமாக சில ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்; அதையும் சொகுசாக கழிக்க, பல வழிகள் உள்ளது.தண்டனை முடிந்து வெளியே வந்த பின், அவர்கள் சாப்பாட்டிற்கு கையேந்த போவதில்லை. லஞ்சம் வாங்கி, பல தலைமுறைக்கு சேர்த்து வைத்த சொத்து மூலம் வாழ்க்கையை கடைசி காலம் வரை சுகமாக அனுபவிக்கலாம்.
இவ்வளவு வாய்ப்புகள் இருப்பதால் தான், லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு, நீதிமன்றங்களின் கட்டமைப்பை அதிகரிப்பது. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, விரைவான தீர்ப்பு கிடைக்க செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
குற்றம் நிரூபணமானால் அவரின் மற்றும் பினாமி பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும்.இவற்றை மேற்கொள்ளாவிட்டால், அரசு அலுவலகங்களில், 'லஞ்சம் வாங்குவது குற்றம்' என்று, 'போர்டு' மட்டுமே தொங்கும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE