விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை கண்காணிக்க காவல் துறைக்கு பெரிதும் உதவிகரமாக உள்ள சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் 60க்கும் மேல் இயங்காததால் வழக்குகளை முடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து துரிதமாக கைது செய்யும் பணியில் முக்கிய பங்காற்றுவது சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள்தான்.இதன் மூலம், குற்ற சம்பவங்கள் நடந்தேறிய அடுத்த சில மணிநேரங்களில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, வழக்கை துரிதமாக முடிவுக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.காவல் துறைக்கு பேருதவியாக உள்ள இந்த கண்காணிப்பு கேமராக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவியோடு மொத்தம் 5,101 பொருத்தப்பட்டுள்ளது.இந்த கேமராக்கள், போலீசார் குற்றம் அதிகம் நடைபெறுவதாக கணித்துள்ள இடங்கள், பொதுமக்கள் அதிகமாக செல்லும் பகுதிகள், வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் உட்பட பல்வேறு முக்கிய இடங்கள் என மொத்தம் 1,323 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகள் அந்தந்த உட்கோட்டங்களில் அமைந்துள்ளது.இந்த சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் மாதம்தோறும் சரியான முறையில் பராமரிக்கத் தவறியதால், பல இடங்களில் கேமராக்கள் வேலை செய்யவில்லை. இதனால், குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.இதற்கு, உதாரணமாக, விழுப்புரத்தில் சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத இறந்த 4 வயது சிறுவன் உடலை இருவர் தள்ளுவண்டியில் போட்டு சென்றனர்.
அந்த இருவரை கூட, காவல் துறை மூலம் பொருத்திய கண்காணிப்பு கேமராவால் கண்டறிய முடியவில்லை. அங்குள்ள ஒரு சில கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலமே போலீசாரால் கண்டறிய முடிந்தது.இந்த கண்காணிப்பு கேமராக்கள் மாதத்தில் 50 முதல் 70 வரை பழுதாகிறது. கேமராக்களை சீரமைக்கும் பணிகளில் அதற்கென உரிய தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் வர வேண்டும். அவர்களை காவல் துறையினர் வரவழைத்து சீரமைக்க காலதாமதம் செய்கின்றனர். குற்ற சம்பவங்கள் அதிகமாக நிகழும் ஆரோவில், பொம்மையார்பளையம், மரக்காணம் அடுத்த சின்ன முதலியார்சாவடி, கோட்டக்குப்பம் பகுதிகளில் கேமராக்கள் பழுதால் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு தாமதம் ஏற்படும் சூழல் நீடிக்கிறது.
இதே நிலை விழுப்புரம் நகரத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் நீடிக்கிறது. தொழில்நுட்பம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, காவல் துறையினரும் அதிநவீன தொழில்நுட்பம் உதவியோடு குற்றவாளிகளை பிடிக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அவ்வப்போது ஆய்வு செய்து முறையாக இயங்குகிறதா என கண்காணித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
-நமது நிருபர்-.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE