பேபி ஸ்ரீராம், கர்நாடக இசை கலைஞர்கடந்த ஆண்டின் முதல் பாதி, சற்று பயமுறுத்துவதாகவே இருந்தது. உற்றார் உறவினரென்று நிறையப் பேர் உயிர் நீத்தனர். நான், எனது கணவர் ஸ்ரீராம், மகன் பரத் ஆகியோர் சங்கீதக்காரர்கள் என்பதால் அனைவருமே புதிய உருப்படிகளை தேடித் தேடி கற்று பயிற்சி செய்தோம். எனது மகன் பரத் நிறைய இசை வாத்தியங்களை வாசிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டி, கற்றுக் கொண்டு, ஒரு நிலையை அடைந்துள்ளான். புதிய நொடேஷன்களை அமைத்து, யுடியூபிலும் பதிவேற்றம் செய்தேன்; அதற்கு வரவேற்பும் இருந்தது. மகன் பரத்திற்கு நிறைய கச்சேரிகள் வாய்த்தன. என்னைப் பொறுத்த வரை இது எனக்கு ஒரு அறுவடை ஆண்டு எனலாம். 17 வருடமாக எனது மகன் பரத்தை இதே துறையில் ஈடுபடுத்தியதன் பலனை கண்கூட பார்க்கிறேன். கணவர் ஸ்ரீராம், பல ஹார்டுவேர் மற்றும் இசை சம்பந்தப்பட்ட மென்பொருட்களை பரிசோதித்து, எங்கே எதை தக்கவாறு உபயோகிக்கலாம் என்பதை முயன்று, அதில் வெற்றியும் கண்டுள்ளார். எனக்கு தனிப்பட்ட முறையில் 2021 நல்ல ஆண்டாகவே அமைந்தது. உலகில் உள்ள அனைவருக்கும், 2022 நன்மை பயக்கட்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். அருண் பிரகாஷ்,கர்நாடக இசை கலைஞர்புதிய ஆண்டு பிறந்துவிட்டது. 2021ல் இவ்வளவு கச்சேரிகள் நடக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். லைவ் கச்சேரிகள் அரங்கேற்றம் குறித்து, நான்கு மாதங்களுக்கு முன் கூட யாரும் நினைத்து பார்க்கவில்லை. 2022ல் நிலைமை இன்னும் மாறட்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் புதிய உத்வேகத்துடன் துவங்கட்டும். பாரதியாரின் வரிகளான, 'செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்' என்பதை, 18 இந்திய மொழிகளில், வானவில் கலாசார மையத்தின் ரவி மொழியாக்கம் செய்ய, அதற்கு இசை வடிவமைத்துக் கொடுத்தேன். இதற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடமிருந்து எனக்கு விருதும் கிடைத்தது. இதற்கு, மொழிகளை உணர்ந்து பாடிய அனுராதா ஸ்ரீராம், 18 புலவர்களின் மொழிகளில் உள்ள சாஹிதயங்களை ஒருங்கிணைத்து நடத்திய முனைவர் எழில் வேந்தனுக்கும் நன்றி. மேற்சொன்ன மிகப் பெரிய சவாலான பணி, 2021ல் தான் நடந்தது. இதே 2021ல், 'சொல்லடி சிவசக்தி எனும் மகாகவியின் ஆறு பாடல்களை, பாம்பே ஜெயஸ்ரீ பாடியளிக்க, அதற்கு இசைவடிவுக்கான பணிகளை செய்து, செப்டம்பர் 2021ல் வெளிவந்தது. ஆக, கடந்த ஆண்டு சிறப்பானதாகவே இருந்தது. வரும் நாட்களும் சிறப்பு சேர்க்கும் என நம்புகிறேன். கீர்த்தனா,கர்நாடக இசை பாடகி'ஹனுமான் சாலிஸா' வைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பர். அது போலவே, 'காஞ்சி பெரியவர்' என அழைக்கப்படும், சந்திரசேகரேந்தி சரஸ்வதி சுவாமிகள் பற்றிய 'பெரியவா சாலிஸா' தற்போதைய பெரியவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் அரங்கேற்றினேன். கணேஷ சர்மா இதை எடிட் செய்திருந்தார்.இதற்கு முன்னதாக ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில், பிப்ரவரி 2021ல் சிலப்பதிகாரம் பற்றி பேராசிரியர் வைத்தியலிங்கம் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகளில் பாடும் பாக்கியமும் பெற்றேன்.இது, எனது ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு களமாகவே நான் கருதி, அதில் வெற்றியும் அடைந்தேன். கடந்த ஆண்டில் தான் எனக்கு பெண் குழந்தையும் பிறந்தது. வாழ்க்கையில், மிக உன்னத ஸ்தானத்தை எனக்களித்த ஆண்டு 2021 தான். டெலிவரிக்குப் பின், மருத்துவமனையில் இருந்த போது, டாக்டர் என்னிடம் வந்து பாரதியார் பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசித்தது மறக்க முடியாதது. புதிய ஆண்டு, அனைவருக்கும் சிறப்பானதாக அமைய பிரார்த்திக்கிறேன். எஸ்.எல்.நரசிம்மன்,இசை கலைஞர்நான், 'அரங்கம் ஆன்லைன்' எனும் வலைதளத்தை நடத்தி வருகிறேன். இதில், ஒவ்வொரு நாளும் தவறாமல், கர்நாடக இசை ஒலிப்பதை கேட்கலாம். என்னைப் பொறுத்த வரை, கர்நாடக இசை என்று எடுத்துக் கொண்டால், சென்ற இரண்டு வருடங்களில் நிறைய நல்லதும், கெட்டதும் நிகழ்ந்துள்ளன. நிறைய இளம் கலைஞர்கள் என்னை அணுகினர். என்னுடைய ஆவணக் கோப்பிலிருந்து அவர்ளுக்குப் புதிதாய் கற்க வேண்டியவற்றையும், அவர்கள் ஏற்கனவே கற்றிருந்த பாடல்களுக்கு வேறு ஒரு வித்வான் அளித்துள்ள பரிமாணத்தை அறியவும் விரும்பினர். இதன் மூலம், பல இளம் கலைஞர்களுக்கு உதவிய நிம்மதி எனக்கு கிடைத்தது. இன்னொன்று சமூக வலைத்தளங்களில் குழுமங்கள் அமைத்து, அங்கேயும் பாட வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட தொகுப்பின் கீழ் அல்லது 'தீம்' என்பதையொட்டி அவர்கள் பாடல்களை வழங்கிஉள்ளனர். ஆன்லைன் கச்சேரிகள் மூலம் நிறைய பேருக்கு வாய்ப்பின் கதவு திறந்துள்ளது.மொத்தத்தில் கொரோனா என்ற கெட்டதிலும், பல புதிய தொழில்நுட்பங்கள், முயற்சிகள் அரங்கேறியதால், 2021ல் நடந்த கெட்டதை விட நமக்கு கிடைத்த நன்மையை எண்ணி திருப்தி அடைவோம். வரும் ஆண்டும் வளமானதாக அமையட்டும். --எஸ்.சிவகுமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE