புதுடில்லி : முதுநிலை மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.
வருவாய் உச்ச வரம்பு
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குக்கான வருவாய் உச்ச வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
நிபுணர் குழு
இது தொடர்பாக ஆய்வு செய்ய மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைந்திருந்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி, வருவாய் உச்ச வரம்பை 8 லட்சம் ரூபாயாக தொடர உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்து இருந்தது.

இந்நிலையில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி மத்திய அரசு தரப்பில் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுடன் ஆலோசனை நடத்துவதாக நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணை ஜன., 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தக் கோரி மாணவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து விசாரிக்க மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.