புதுடில்லி : 'நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளது, சீன அரசு நடத்தும் வழக்கமான மிரட்டல் நாடகம்' என, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை உள்ளது. கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் சீனப் படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன. இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் 15 முக்கிய இடங்களுக்கு, மாண்டரின் மொழியில் புதிய பெயர்களை சீன அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது: மிக நீண்ட காலமாக சீனா கடைப்பிடிக்கும் மிரட்டல் யுக்தி இது. தான் எதிர்க்கும் நாடுகளை உணர்வுப்பூர்வமாக துாண்டிவிடுவது சீனாவின் வாடிக்கை. அதற்கு சமீபத்திய உதாரணம், தைவான். அதை தன் நாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக பல நடவடிக்கைகளை சீனா எடுத்து வருகிறது.

தைவானின் வான்வெளியில் கடந்தாண்டின் பெரும்பகுதி சீன போர் விமானங்கள் சுற்றி வந்துள்ளன. கடந்த நவம்பர் 28ல் ஒரே நாளில் 27 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் சென்று வந்துள்ளன. அதுபோல இந்தியாவை மிரட்டுவதற்காக அருணாச் சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு புதிய பெயர்களை சீனா அறிவித்துள்ளது.
எல்லை பிரச்னை குறித்து பேச்சு நடத்துவதற்கு முன்வரும்படி பிரதமர் நரேந்திர மோடி அரசை மிரட்டுவதற்காக இந்த செயலில் சீனா ஈடுபட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், சமீபத்தில் திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவைச் சந்தித்துள்ளார்; மேலும் திபெத்திய அதிகாரி களுடன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சீனா, அருணாச்சல பிரதேசத்தில் பெயர்களை மாற்றி மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்தாண்டு இறுதியில் நம் எம்.பி.,க்கள் சிலர் திபெத் சென்றனர். அதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத் மற்றும் அருணாச்சல பிரதேசத்துக்கு நம் நாட்டு தலைவர்கள் செல்லும்போதெல்லாம் அதற்கு சீனா கண்டனம் தெரிவிக்கும். அதனால் இந்த விவகாரத்தில் உடனடியாக பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்காமல் மத்திய அரசு அமைதியாக கவனித்து வருகிறது. தேவையான நேரத்தில் தகுந்த இடத்தில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கல்வானில் சீன கொடி
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள சில பகுதிகளில் சீனா ராணுவம் கடந்தாண்டு மே மாதத்தில் அத்துமீறி நுழைந்தது. அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. பல சுற்று பேச்சுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் இரு நாட்டுப் படைகளும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் தன் தேசியக் கொடியை ஏற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோவை பதிவிட்டு, 'சீன மக்களுக்கு, நம் ராணுவத்தின் புத்தாண்டு வாழ்த்துகள்' என, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியுள்ளது மற்றும் எல்லையில் அதன் தேசியக் கொடியை ஏற்றியுள்ள விவகாரத்தில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE