திருப்பதி : போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக, தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்யக் கோரி, மாநில பா.ஜ., தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இந்த உண்ணாவிரத போராட்டம் அனுமதி பெறாமல் நடந்ததாகவும், கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாகவும் கூறி, நேற்று முன்தினம் இரவு சஞ்சயை போலீசார் கைது செய்தனர்.
மணகொண்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கும் சஞ்சய் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதையடுத்து, அவரை கரிங்கனார் காவல் பயிற்சி மையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது.சஞ்சய் உள்ளிட்ட பலர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் போலீசாரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தது மட்டுமின்றி, கொரோனா விதிகளை மீண்டும் மீண்டும் மீறியதற்காகவும் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சஞ்சய் உள்ளிட்டோரின் தாக்குதலில் சில போலீசார் காயம் அடைந்தனர்.இது தொடர்பாகவும் பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் கரீம்நகர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவத்தால் தெலுங்கானாவில் பதற்றம் நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE