இம்பால்: மணிப்பூரில் அமைதி மற்றும் வளர்ச்சி நிலவுவதை உறுதி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடந்த நிகழ்ச்சியில் 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மணிப்பூர் மாநிலம் ஒரு காலத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. பிரதமராவதற்கு முன்னர் பல முறை இங்கு வந்துள்ளேன். உங்கள் மனதில் உள்ள வேதனைகளை நான் அறிந்துள்ளேன். இதனால், தான் 2014க்கு பிறகு மத்திய அரசின் அனைத்து துறைகளையும் உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்தேன்.

கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை, மணிப்பூரில் 6 சதவீத மக்களே குழாய் மூலம் தங்களது வீட்டில் குடிநீர் பெற்றனர். ஆனால் இது, தற்போது ஜல்ஜீவன் திட்டம் மூலம் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நீங்கள் அமைத்த நிலையான அரசு, முழு பெரும்பான்மையுடன், அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி உங்களுக்காக உழைத்து வருகிறது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்னரும் அந்தமான் நிகோபார் தீவில் ஒரு மலை சிகரத்திற்கு மவுண்ட் ஹாரியட் என்ற பெயர் இருந்தது. இதனை மவுண்ட் மணிப்பூர் என மாற்ற முடிவு செய்துள்ளோம். கிழக்கை பார்க்காதீர்கள் என்ற ஒற்றை கொள்கையை முந்தைய அரசு பின்பற்றி வந்தது. ஆனால், தற்போது, நாங்கள் கிழக்கு நோக்கிய பார்வை என்ற கொள்கையை பின்பற்றி வருகிறோம்.
இந்தியா, இன்று ஆயிரகணக்கான கோடிக்கு பாமாயில் இறக்குமதிக்கு செலவு செய்து வருகிறது. இதில், இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக 11 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வடகிழக்கு விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
மணிப்பூரை தடை மிகுந்த தடை மிகுந்த மாநிலமாக முந்தைய அரசுகள் மாற்றியதை நீங்கள் அறிவீர்கள். மக்களின் ஒற்றுமையை உடைக்க அரசியல் செய்தன. ஆனால், பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பின்மையை அகற்றி, வளர்ச்சி மற்றும் அமைதி நிலவுவதை இரட்டை இன்ஜீன் அரசு உறுதி செய்துள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.