புதுடில்லி: டில்லியில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால், பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தலைநகர் டில்லியிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கோவிட் பரவல் மேலும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆலோசனை நடத்தியது.
இதன் பின்னர் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியதாவது:
கோவிட் பரவலை கட்டுப்படுத்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை தவிர்த்து மற்ற அரசு துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவார்கள். தனியார் நிறுவனங்களிலும் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும். மெட்ரோ ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் வெளியில் கூட்ட நெரிசலை தவிர்க்க பஸ் மற்றும் மெட்ரோ ரயில்கள் 100 சதவீத இருக்கை வசதியுடன் இயக்கப்படும்.

ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. கடந்த 8 -10 நாட்களில் 11 ஆயிரம் பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 350 பேர் மட்டும் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் வசதி தேவைப்படுகிறது. இவ்வாறு மணிஷ் சிசோடியா கூறினார்.