சென்னை: ஆன்லைன் ரம்மியில் லட்சக் கணக்கில் பணத்தை தோற்று தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் தினசரி செய்தியாகி வருகிறது. அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது சென்னை ஐகோர்ட். ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் அமைச்சர் ரகுபதி தலைமையிலான சட்டத்துறை புதிய சட்டத்தை கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வருகிறது.
ஆன்லைன் ரம்மியால் சுமார் ஒரு கோடி ரூபாயை இழந்த சென்னை பெருங்குடியைச் சேர்ந்த வங்கி அதிகாரி மணிகண்டன்(42), அதனால் மனைவி உடன் ஏற்பட்ட தகராறில், அவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்று, இரண்டு பிள்ளைகளையும் கழுத்தைத் நெறித்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். அழகான இரு பிள்ளைகள், அன்பான மனைவி, நல்ல வேலை, லட்சங்களில் சம்பளம் என சென்றுகொண்டிருந்த மணிகண்டனின் வாழ்க்கையை ஆன்லைன் ரம்மி எனும் சூறாவளி சின்னாபின்னமாக்கி சென்றுவிட்டது.

ஆன்லைன் சூதில் வெல்ல முடியாது!
ஆன்லைன் ரம்மி குறித்து எழுத்தாளரும், சைபர் பாதுகாப்பு நிபுணருமான ஹரிஹரசுதன் தங்கவேலு தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் ஆர்.என்.ஜி., (Random Number Generator) அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் அல்காரிதம் கண்டுகொள்ளும்.

அடிமை என்று தெரிந்தால் அதன் அரக்க முகம் வெளிவரும். மிகமிகக் கடினமாகத்தான் கார்டுகளை (எண்களை) வழங்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியைக் கொடுக்கும். நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாள் கழித்து, போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன் வா என வலை விரிக்கும். ஆகவே அல்காரிதத்தை வென்று பணக்காரனாவது என்பதற்கு வாய்ப்பே இல்லை. இதிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்களுக்கு, முறையான மனசிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம், என்கிறார்.
ஆன்லைன் ரம்மி இது போன்று பல குடும்பங்களை நாசமாக்குகிறது என புகார் எழுந்ததால் அதனை அ.தி.மு.க., அரசு தடை செய்து சட்டமியற்றியது. அதனை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தை நாடின. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் 'முறைப்படுத்துவதற்கு உரிய விதிகள் இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க முடியாது. உரிய காரணங்களை தெரிவிக்காமல் பிறப்பிக்கப்பட்ட, இந்தச் சட்டம் செல்லத்தக்கது அல்ல' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வாக்குறுதி தந்து 5 மாதம் கடந்தாச்சு!
அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் மீண்டும் புதிய சட்டம் உருவாக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், 'உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களுடன் சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுக்கு இணங்க, புதிய சட்டம் தாமதமின்றி கொண்டுவரப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது' என்றார். அவர் சொல்லி இன்றுடன் சரியாக ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த காலக்கட்டத்தில் 50 பேராவது இறந்திருப்பார்கள். ஆனாலும் விடிவு பிறக்கவில்லை. சட்டத் துறை அமைச்சரை நம்பாமல் முதல்வரே இதில் தலையிட்டு விரைவில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE